சுடச்சுட

  

  சர்க்கரை ஆலையை இயக்கக் கோரி துணை நிலை ஆளுநரிடம் விவசாயிகள் மனு

  By புதுச்சேரி,  |   Published on : 28th September 2016 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியூர் பாரி சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர்.
   குழு நிர்வாகிகள் முருகையன், டிபி.ரவி, பி.ஜெயராமன், ஜீவானந்தம், ஜெயகோபி, புருஷோத்தமன், கோதண்டபாணி உள்ளிட்டோர் துணைநிலை ஆளுநரிடம் அளித்த மனு: அரியூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இயங்காமல் உள்ளது. இதனால் புதுச்சேரி மாநில கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
   குறிப்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கரும்புக்கான ஆலை இயங்காததால், தமிழகப் பகுதியில் அமைந்துள்ள ஈ.ஐ.டி. நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலைக்கு கரும்பை வெட்டி அனுப்பும் நிலையால் பெரியளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசுக்கு ரூ.32 கோடி இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.900 செலவாகிறது.
   இதனால் புதுச்சேரி மாநில மாட்டுவண்டித் தொழிலாளர்கள் உள்பட பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலையை நிகழாண்டில் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள் வழங்க வேண்டும். முத்தரப்புக்கூட்டத்தை நடத்த வேண்டும். கரும்பு நாற்றுக்கு அரசு தரும் மானியத்தை உயர்த்தித் தர வேண்டும்.
   கரும்புக்கான ஆதார விலை நிலுவை ரூ.27 கோடி வழங்கப்படவில்லை. இதற்காக ஆலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   கரும்பு பயிருக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
   மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் கிரண்பேடி, நிகழாண்டில் கரும்பு ஆலையை இயக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai