சுடச்சுட

  

  சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கை: இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

  By புதுச்சேரி,  |   Published on : 28th September 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கி (செப்.28) இரு நாள்கள் நடைபெறுகிறது. கலந்தாய்வில் எம்பிபிஎஸ்-24, பிடிஎஸ் படிப்புக்கு 72 இடங்கள் உள்பட உயிரியல் பாடப்பிரிவில் மொத்தம் 143 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
   புதுச்சேரியில் 2016-17ஆம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 2 கட்டங்களாக நடைபெற்றன. இதில் எம்பிபிஎஸ்-410 இடங்கள், பிடிஎஸ்- 124 மற்றும் கால்நடை மருத்துவம், ஆயுர்வேதா, நர்சிங், பிபிடி, எம்எல்டி உள்ளிட்ட இடங்கள் நிரப்பப்பட்டன.
   இந்தக் கலந்தாய்வில் வாய்ப்பு (சீட்) பெற்ற மாணவர்களில் சிலர் ஜிப்மரில் சேர்ந்தனர். மேலும் சிலர் அதிக கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டனர். இதையடுத்து, காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செப்.26, 27ஆம் தேதிகளில் நடைபெறும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 40 பிடிஎஸ் இடங்களை சென்டாக் மூலம் நிரப்பிக் கொள்ள ஒப்புதல் அளித்தது.
   மேலும் அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை உயர்நீதிமன்ற அனுமதி பெற்று, அந்த இடங்களை புதுச்சேரி மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என மாணவர், பெற்றோர் நலச் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
   இதனையேற்று, புதுவை அரசு இந்திரா காந்தி கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக இருந்த 11 இடங்களுக்கு உயர்நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளது. இதையும் சேர்த்து தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் 14 இடங்கள் காலியாக உள்ளன. வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து தற்போது மாகே பல் மருத்துவக் கல்லூரியும் 15 பிடிஎஸ் இடங்களை சென்டாக் மூலம் நிரப்பிக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
   இதனால் மாகே பல் மருத்துவ கல்லூரியின் காலி இடங்கள் 19ஆக உயர்ந்துள்ளன. இந்தக் காரணங்களால் 26, 27ஆம் தேதிகளில் நடக்கவிருந்த கலந்தாய்வை 28, 29ஆம் தேதிகளுக்கு சென்டாக் நிர்வாகம் ஒத்தி வைத்தது. இதன்படி உயிரியல் பாடப் பிரிவுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு புதன்கிழமை(செப்.28) தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.
   அதன்படி, காலை 9 மணிக்கு கட்ஆப் மதிப்பெண் 200.000 முதல் 184.444 வரை, 10 மணிக்கு 184.333 முதல் 176.444 வரை, 11 மணிக்கு 176.333 முதல் 169.333 வரை, நண்பகல் 12 மணிக்கு 169.000 முதல் 162.000 வரை, மதியம் 2 மணிக்கு 161.666 முதல் 155.333 வரை, 3 மணிக்கு 155.000 முதல் 147.666 வரை, மாலை 4 மணிக்கு 147.333 முதல் 139.666 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்து பிரிவு மாணவருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் பலர், அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 14 இடங்களில் சேர்வதற்கு விரும்புகின்றனர். தொடர்ந்து வியாழக்கிழமை 139.333 முதல் 80.000 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 30ம் தேதி பி.பார்ம் பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
   மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் விவரம்: இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி-14, மகாத்மா காந்தி கல்லூரி-2, விநாயகா மிஷன் கல்லூரி-2, வெங்கடேஸ்வரா கல்லூரி-2, லட்சுமிநாராயணா கல்லூரி-2 உள்பட மொத்தம் 24 இடங்கள் காலியாக உள்ளன.
   பல் மருத்துவக் கல்லூரி: கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி 2, இந்திரா காந்தி கல்லூரி 3, வெங்கடேஸ்வரா கல்லூரி 48, மாகே பல் மருத்துவக் கல்லூரி 19 என மொத்தம் 72 இடங்கள் காலியாக உள்ளன.
   இதேபோல் புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1 இடமும், மாகே ராஜீவ் காந்தி ஆயுர்வேதா கல்லூரியில் 2 இடங்களும் உள்ளன. கோரிமேடு அன்னை தெரசா கல்லூரியில் நர்சிங்-3, பிபிடி-7, எம்எல்டி-3 இடங்கள் காலியாக உள்ளன.
   தனியார் நர்சிங் கல்லூரிகள்: பிம்ஸ்-1, கஸ்தூர்பாய்-9, மணக்குள விநாயகர்-1, சபரி-4, பத்மாவதி-2, ராக்-3, இந்திராணி-4 என மொத்தம் 24 இடங்கள் காலியாக உள்ளது.
   வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பிபிடி-4, எம்எல்டி-4 இடங்கள் வீதம் உள்ளன.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai