சுடச்சுட

  

  தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கட்டணக்குழுத் தலைவர் புகார்

  By புதுச்சேரி  |   Published on : 28th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாநில கட்டணக்குழு உத்தரவை மீறி 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக, குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.ராஜேஸ்வரன் தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பி உள்ளார்.
   அவர் அனுப்பிய புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: உயர்நீதிமன்ற பரிந்துரையின் பேரில் கடந்த 6.3.2015-இல் சுயநிதி தனியார் தொழில்கல்வி நிலையங்களுக்கான கல்வி கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டேன்.
   அதன்பின் புதுச்சேரி கல்வி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும், மாணவர், பெற்றோர் சங்க பிரதிநிதிகள், சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகிகளுடன் பலமுறை கூட்டம் நடத்தி மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க என் தலைமையிலான குழு தீர்மானித்தது. இதற்கிடையே கட்டண நிர்ணயக் குழு, கல்லூரிகளில் உள்ள வசதிகள் குறித்து ஆராய ஆய்வுக் குழுவை அமைக்க முடிவு செய்தது.
   இந்த நிலையில் புதிய செயலர் பொறுப்பேற்றவுடன் முழுமையான ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டு இதுவரை 3 மருத்துவக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்தவுடன் கல்விக் கட்டணம் குறித்து குழு நிர்ணயிக்கும்.
   நீட் தகுதி தேர்வு: இதற்கிடையே மருத்துவக்கல்விக்கு நீட் தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவ, மாணவியரிடம் ரூ.19 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை ஆண்டுக்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.
   இதையடுத்து ஏற்கெனவே குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தவிர கூடுதலாக வசூலிக்கக்கூடாது என அக்கல்லூரிகளுக்கு கட்டணக் குழு உத்தரவிட்டது.
   மேலும் இறுதியாக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை வசூலிப்பது தொடர்பாக பெற்றோரிடம் எழுத்து பூர்வமான உறுதிமொழி வாங்கவும் அறிவுறுத்தியது. இதற்கிடையே கடந்த 16-ஆம் தேதி சுகாதாரத் துறையும், 3 கல்லூரிகளுக்கு அனுப்பிய எச்சரிக்கை அறிவிப்பில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என தெரிவித்தது.
   எனினும் அரசு மற்றும் கட்டணக் குழுவின் தெளிவான உத்தரவுகளை மீறி 3 கல்லூரிகளும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது.
   நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல், மாநில அரசு, கட்டண குழுவின் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 3 மருத்துவக் கல்லூரிகள் மீதும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுத்து நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை காக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ராஜேஸ்வரன்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai