சுடச்சுட

  

  புதிய கல்விக்கொள்கை: சம்ஸ்கிருத திணிப்பை புதுவை அரசு எதிர்க்கும்; முதல்வர் நாராயணசாமி

  By புதுச்சேரி,  |   Published on : 28th September 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், சம்ஸ்கிருதத் திணிப்பு மற்றும் குருகுலக்கல்வி முறை ஆகிய அம்சங்களை புதுச்சேரி அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
   சட்டப்பேரவை வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: மாநில அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
   புதுச்சேரி மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன் ரூ.20 கோடி முழுமையாக தள்ளுபடி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவர். இதன்படி வாங்கிய கடன், வட்டி, அபராதம் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். அதே போல கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடன் பெற்றவர்களின் அபராத வட்டித் தொகை ரத்து செய்யப்படும்.
   மத்திய அரசு அறிமுகப்படுத்தி, மாநில அரசின் கருத்துக்காக அனுப்பி வைத்துள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அமைச்சரவையில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. பள்ளி கல்விக் கொள்கை, கல்லூரி கல்விக் கொள்கை குறித்து பரிசீலனை செய்து புதுவைக்கு ஏற்ப அதை நடைமுறைப்படுத்த கருத்துகள் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.
   இதன்படி சம்ஸ்கிருதத்தை புதுவை மாநில பள்ளிகளில் கட்டாயமாக புகுத்தக்கூடாது. குருகுலக் கல்வியை எப்போதும் ஏற்க மாட்டோம்.
   தற்போதுள்ள கல்வி முறையை முழுமையாகத் தொடர வேண்டும். சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அளிக்கப்படும் சலுகைகள் தொடர வேண்டும் என கருத்துகள் மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.
   புதுவையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
   கடந்த ஆட்சியில், பணி ஆணை கூட வழங்காமல் விதிமுறை மீறி நியமிக்கப்பட்ட பொதுப்பணித் துறை ஊழியர்களை தேர்தல் துறை தான் நீக்கியுள்ளது.
   இவர்களுக்கான சம்பளம் வழங்கக்கூட நிதி ஒதுக்கப்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். ராகுல்காந்திக்கு களங்கம் விளைவிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு செயல்படுகின்றன. இதற்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார் என்றார் நாராயணசாமி.
   அமைச்சர் நமச்சிவாயம், அரசுக் கொறடா அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai