சுடச்சுட

  

  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை இயக்கமாக மாற்ற வேண்டும்: அமைச்சர் ஷாஜகான் பேச்சு

  By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஓர் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் பேசினார்.
   தில்லியில் இயங்கும் சாலைப் போக்குவரத்து கல்வி நிலையம் சார்பில் புதுவை போக்குவரத்து போலீஸார், பொதுப்பணித் துறை, உள்ளாட்சி, பி.ஆர்.டி.சி. உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு சாலைப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் விபத்து புலனாய்வு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
   வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்துப் பேசியது: புதுவையில் போக்குவரத்து மேலாண்மை முக்கிய பிரச்னையாக உள்ளது.
   இது ஒரு குறிப்பிட்ட துறையின் மூலம் தீர்க்கக்கூடிய பிரச்னை அல்ல. பல துறைகளின் பங்களிப்பு அவசியம்.
   காலை, மாலை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
   புதுவையில் 10 முதல் 12 சதவீத மக்களே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். மோனோ ரயில் அமைக்க அதிகம் செலவாகும். ஆனாலும், திட்டத்தை செயல்படுத்துவது குறித்து யோசிக்கிறோம்.
   பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டுமானால், அதிகம் பேருந்துகளை இயக்க வேண்டும். அதற்கு அதிக செலவாகும். எனவே, தனியார் மூலம் மினி பேருந்துகள் இயக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
   ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மூலம் சாலை விரிவாக்கம், பாலங்கள், பல அடுக்கு வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டை அமைக்க வேண்டும். இதற்கு ரூ.5 ஆயிரம் கோடி தேவை. அதனால் தனியார் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படும்.
   புதுவையில் பெரும்பாலானோர் சாலை விதிகளை மதிப்பதில்லை. இது தொடர்பாக உடனடியாக சட்டம் இயற்றினால் எதிர்ப்பு எழும். எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரு சில நாள்களுக்கு மட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தாமல், தொடர்ந்து இதனை இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார்.
   நிகழ்ச்சியில் போக்குவரத்துச் செயலாளர் அருண் தேசாய், முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன், சாலைப் போக்குவரத்து கல்வி நிலைய தலைவர் ரோகித் பலுஜா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம்.எஸ். உபாத்யாய, எஸ்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai