புதுச்சேரியில் விரைவில் நடைபெறவுள்ள எம்பிபிஎஸ் சென்டாக் மாணவர் சேர்க்கையை ஆளுநர் மாளிகை தீவிரமாக கண்காணிக்கும் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவ, மாணவியர் அடைந்து வரும் துயரங்கள் கண்முன்னே தெரிகின்றன. இதை முழுமையாக தடுக்க இயலும். மூத்த அதிகாரிகள் தீவிரமாக செயல்படாமையால் இந்த நிலை ஏற்பட்டது.
கடந்த மே மாதம் 30, 31 தேதிகளில் நான் சென்டாக் அலுவலகத்துக்கு சென்று பார்வையிட்டது பொதுமக்கள், பெற்றோர் அளித்த புகார் காரணமாகத்தான். மாணவர்கள் நலனில் அக்கறையின்றி, புறக்கணிக்கும் சூழலை காண நேர்ந்தது.
அதிகாரிகள் அவ்வப்போது மாணவர்களிடம் இருந்து பெறப்படும் குறைகள் தொடர்பாக கவனித்து செயல்பட்டு வந்திருந்தால் இதுபோன்ற பிரச்னைகளை நீண்ட நாள்கள் முன்பே சரிசெய்திருக்கலாம். அதிகாரிகள் மக்களின் குறை கேட்க நேரம் ஒதுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை வேண்டும் என்றால் அதிகாரிகள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் தங்கள் செயல்பாட்டில் நேர்மையாக இருக்க வேண்டும். உங்கள் பணியை வழிபடுங்கள். தற்போது சென்டாக் எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெற உள்ளது. மீண்டும் பிரச்னைக்கு வழிகோலக்கூடாது.
சேர்க்கை தொடர்பாக நிரந்தரமான செயல்பாட்டு முறையை உருவாக்க வேண்டும்.
ஆளுநர் மாளிகை சென்டாக் எம்பிபிஎஸ் சேர்க்கையை தீவிரமாக கண்காணிக்கும். ஏதாவது புகார் எழுந்தால் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும். தவறு புரியும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும். நல்ல பணிகளை செய்யும் அதிகாரிகள் எப்போதும் பாராட்டப்படுவர். அவர்களது பணி கோப்புகளில் இது பதியப்படும் என தெரிவித்துள்ளார் கிரண்பேடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.