தலித் சிறப்புக் கூறு திட்ட நிதியை செலவழிப்பது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதம்:
கொறடா அனந்தராமன்: சிறப்புக்கூறு நிதியை மடைமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகளை உறைவிட பள்ளிகளாக மாற்ற வேண்டும். வருங்காலத்தில் ஆதிதிராவிடர் நலனுக்காக தனி பட்ஜெட் போட வேண்டும்.
அன்பழகன்: தலித் சிறப்புக் கூறு நிதிக்காக இந்தாண்டு ரூ.296 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1100 கோடிக்கு துணை பட்ஜெட் போட வேண்டும். 16 சதவீதம் நிதி ஒதுக்கவில்லை. சமூக நலத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு ரூ.10.91 கோடி. 15 ஆயிரம் பேருக்கு மேல் முதியோர், விதவை உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் எவ்வளவு பேர் தாழ்த்தப்பட்டோர்?
பாலன் (காங்): ஆதிதிராவிடர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தலாம்.
சிவா (திமுக): தொகுதி வாரியாக தாழ்த்தப்பட்டோர் பட்டியல் வெளியிடப்படுமா? தொகுதி வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த பட்டியல் தாருங்கள். விகிதாசாரப்படி பணம் ஒதுக்குங்கள்.
அமைச்சர் கந்தசாமி: ரூ.100 கோடிக்கு கடன் வாங்கப்படும். 10ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கத் திட்டம் தீட்டி உள்ளோம். நான் விரிவான கணக்கெடுப்பு நடத்த உள்ளேன். 60 நாள்கள் அவகாசம் தாருங்கள். அனைத்துப் பிரச்னைகளையும் சரி செய்து விடுகிறோம். கடந்த ஆட்சியில் ஏம்பலம் தொகுதியில் வசதி படைத்த 296 பேருக்கு பட்டா தந்துள்ளனர். அதனை நீக்க முடியவில்லை. திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிறப்புக் கூறு நிதி முழுவதும் ஆதிதிராவிடர் நலனுக்கு செலவிடப்படும். 16 சதவீதம் தொகையும் ஒதுக்கப்படும்.
முதல்வர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, புதுவையில் தலித் கூறு சிறப்பு நிதி 93.4 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்கள் நேரடியாக பலன் தருமோ, அதை செய்வோம். அனைத்துத் தொகுதிகளிலும் தலித் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.