புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சியை இணைத்து மாநகராட்சியை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மத்திய அரசிடம் இருந்து பல்வேறு உதவிகள் கிடைக்கும். அதேபோல, அரியாங்குப்பம், வில்லியனூர், பாகூர் ஆகிய கொம்யூன்களை இணைத்து நகராட்சி உருவாக்க வேண்டும்.
புதுவை நகரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. பல வீடுகள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றிற்கு வரி வசூல் செய்வதில்லை. இரவு நேரங்களில் தவறுகள் நடக்கிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நான்கு பிராந்தியமும் சம வளர்ச்சியில் இருக்க வேண்டும். ஏனாமில் உள்ள நூறு சதவீத வளர்ச்சியில் ஒரு சதவீத வளர்ச்சி கூட புதுவையில் இல்லை. இதில் காரைக்கால் மிகவும் பின்தங்கியுள்ளது.
காரைக்கால் மருத்துவமனையில் போதிய வசதியில்லை. ரூ.3 கோடியில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகம் இன்னும் சீரமைக்கப்படவில்லை.
அங்குள்ள கடற்கரைக்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். புதுவையில் பல பகுதிகளை லே அவுட் போட்டு விற்கின்றனர். இதில் பார்க்கிங், விளையாட்டுத் திடல் என எதுவும் இல்லை. ஆயினும் இதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.
தனியார் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
2.5 சதவீதம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். 40 சதவீத ஊனத்திற்கு 1500 ரூபாய் கொடுக்கிறோம். பலர் போலிச் சான்றிதழ் வாங்கி உதவித்தொகை பெறுகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர்கள் புதுவையில் அதிகமாக உள்ளனர். இதனை தடுக்க வேண்டும். 12 மணி நேரம் வேலை செய்யும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. சமூக நலத்துறை மூலம் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள் இந்தாண்டு வழங்கப்படுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.