பொய்யான குற்றச்சாட்டு கூறினால் வழக்கு தொடரப்படும்

பொய்யான குற்றச்சாட்டு கூறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் நாராயணசாமி பேரவையில் எச்சரிக்கை விடுத்தார்.
Published on
Updated on
2 min read

பொய்யான குற்றச்சாட்டு கூறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் நாராயணசாமி பேரவையில் எச்சரிக்கை விடுத்தார்.
 சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக அவர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பேரவையில் நடந்த விவாதம்:
 அன்பழகன்: சென்டாக் மாணவர் சேர்க்கையில் சரியான பதிலை அரசு தரவில்லை. துணைநிலை ஆளுநர் பல கருத்துகளை அரசுக்கு எதிராக தெரிவித்து வருகிறார். கட்டணக் குழுவும் கட்டணத்தை நிர்ணயிக்காமல் மாணவர்களை அலைக்கழித்தது. கட்டணக் குழுவின் விகிதம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஏற்கவில்லை.
 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவாக தான் அரசு செயல்படுகிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முழுமையாக 162 இடங்களை நிரப்ப வேண்டும். கட்டணக்குழு கட்டணத்தை தனியார் கல்லூரிகள் ஏற்க வேண்டும் என மனு செய்துள்ளனர்.
 துணைநிலை ஆளுநர்
 இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் எனக் கூறி உள்ளார். நீதிமன்றத்தில் அரசின் நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
 லட்சுமி நாராயணன்: 2 விளக்கங்களை தர வேண்டும். பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு விளக்கம் தெரிவித்து நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தை தான் தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வசூலிக்க வேண்டும் என அரசு நீதிமன்றத்தில் தெளிவாக கூறியுள்ளது.
 ஜெயபால்: மருத்துவ பட்டமேற்படிப்பு விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தலையிட்டு முறைகேடு நடந்ததாக புகார் கூறினார். முதல்வர் அப்போதே தெளிவான பதிலைத் தரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியும் கேள்வி எழுப்பினார்.
 அமைச்சர் கந்தசாமி: 5 ஆண்டுகளில் என்.ஆர். காங்கிரஸ் அரசு இதில் என்ன செய்தது.
 ஜெயபால்: நாங்கள் பழி கூறவில்லை. கட்டணம் நிர்ணயிக்காததே இந்தப் பிரச்னைக்குக் காரணம். கட்டணத்தை முறையாக நிர்ணயித்திருந்தால் வேறு எந்த முறைகேடும் இல்லை.
 அமைச்சர் நமச்சிவாயம்: எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமே கேட்கவில்லை. பழி கூறி விட்டு வெளிநடப்பு செய்து விட்டனர்.
 பாலன்: ஓராண்டு காலத்தில் சென்டாக் தொடர்பாக ஆளுநர் என்ன கூட்டத்தை நடத்தி உள்ளார். தனியார் கல்லூரிகளை அழைத்துப் பேசினாரா. விமர்சித்து வருகிறார். எவ்வாறு புதுவை வளரும்.
 முதல்வர்: கட்டணம் நிர்ணயிக்கும் குழு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. நீதிமன்றத்தின் கீழ் உள்ளது. கட்டணத்தை நிர்ணயிக்க பலமுறை அரசு கடிதம் எழுதியது. தாமதத்துக்கு அரசு காரணம் இல்லை.
 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரம் இல்லை என குழுத் தலைவர் தெரிவித்தார். தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தையே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் வசூலிக்க வேண்டும்.
 அன்பழகன்: நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அரசு தரப்பு கூறியது.
 ஆளுநர் செயலர் மீது நடவடிக்கை
 முதல்வர்: துணைநிலை ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: புதுவை அரசின் கவனத்துக்குக் கொண்டு வராமலும், சட்டத்துறையை ஆலோசிக்காமலும், துறை அமைச்சர், தலைமைச் செயலர், முதல்வரை ஆலோசிக்காமலும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவரது பெயரை குறிப்பிட்டுள்ளார்.
 அரசின் ஐஏஎஸ் அதிகாரி, குறிப்பாக அரசுக்குத் தெரியாமல் அனுமதியும் பெறாமல் பதில் மனுவை தாக்கல் செய்யலாமா? யார் அவருக்கு அதிகாரம் அளித்தது. துணைநிலை ஆளுநரின் செயலராக பணிபுரிந்தாலும், அவர் மாநில அரசின் ஊழியர்.
 சட்டத் துறையை கலந்து பேசி தேவநீதிதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்யப்படும்.
 மாநில அரசின் கடிதப் பரிமாற்றங்கள், ஆளுநர் கடிதப் பரிமாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தூண்டி விடப்பட்டு போடப்பட்ட வழக்கு போல் உள்ளது.
 மல்லாடி: நிகர்நிலைப் பல்கலைக்கழக கலந்தாய்வு கூட நடத்த முடியாது. இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போனால் புதுவை மாணவர்கள் பாதிக்கப்படுவர். அரசு ஒரு நிலையிலிலும், ஆளுநர் ஒரு நிலையிலும் சென்றால் பாதிப்பு ஏற்படும். 22 மாணவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பிரச்னை உள்ளது.
 முதல்வர்: பொய்யான குற்றச்சாட்டு கூறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயாராக உள்ளோம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com