புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என மாணவர் - பெற்றோர் நலச் சங்கத் தலைவர் வை.பாலா வலியுறுத்தினார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: இளநிலை மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், செவிலியர் உள்ளிட்ட படிப்புகளுக்கு தற்போது சென்டாக் நிர்வாகம் சட்ட விதிமுறைகளை அறிவித்து இணையதளத்தில் அந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது.
அதன்படி, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 மருத்துவ இடங்களில் 22 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடாகும். 22 இடங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 283 மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறப்பட்டன.
"நீட்' மூலம் கடந்த ஆண்டு 7 தனியார் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்ற மாணவர்களிடமிருந்து அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட பல மடங்கு அதிகமாகக் கட்டணம் பெறப்பட்டுள்ளது. ஆண்டு கட்டணமாக 12 லட்சம் வாங்கப்படுகிறது. இதனைக் கண்டித்து கட்டணக் குழு நீதிபதி ராஜேஸ்வரன் புதுவை அரசுக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிமன்றத்துக்கும் விரிவாக புகாரை ஒன்றை அளித்தார்.
நீட் தேர்வு விதிகளின்படி மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் போது, சென்டாக் மூலமே கல்லூரிகளுக்கு காசோலை மூலம் கட்டணங்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஏற்கெனவே ராஜேஸ்வரன் கமிட்டி, கல்விக் கட்டண விவரத்தின்படி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 3.13 லட்சம், வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 2.99 லட்சம், பிம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 3.35 லட்சம், மாஹே பல் மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 79 ஆயிரம், வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 79 ஆயிரம், செவிலியர் படிப்புக்கு அதிகபட்சமாக ரூ. 37 ஆயிரம் என நிர்ணயித்துள்ளது.
ஆனால், கடந்த சென்டாக் மூலம் சேர்க்கைப் பெற்ற மாணவர்களிடமிருந்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் ரூ. 4 லட்சமும், நிகர்நிலைப் பல்கலை.களின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகள் ரூ. 10 லட்சமும், பல் மருத்துவக் கல்லூரிகள் ரூ. 3 லட்சமும் ஆண்டுக் கட்டணமாகப் பெற்றுள்ளன.
அதேபோல, அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வியகம் விதிமுறைப்படி அனைத்து பொறியியல் கல்லூரிகளின் கலந்தாய்வும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் மாணவர்கள் சேர்க்கை நிறைவடைவதால், ஜூன் இறுதியில் முதல் பொதுக் கலந்தாய்வும், ஜூலை இறுதியில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூன்றாம் கட்டப் பொதுக் கலந்தாய்வும் நடத்திட வேண்டும்.
ஆகையால், அதிகக் கட்டணங்கள் வசூலிப்பதைத் தவிர்த்து வெளிப்படைத் தன்மையாக சென்டாக் பொதுக் கலந்தாய்வை நடத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.