ஏழைகளுக்கு மட்டுமே இலவசங்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என நலத்துறை அமைச்சர் கந்தசாமி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசியவர்கள்:
என்எஸ்.ஜெயபால் (என்.ஆர் காங்): துணைநிலை ஆளுநர் ஊழலுக்கு துணை போகவில்லை. அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
கொறடா அனந்தராமன்:பேரவை உறுப்பினர்கள் எல்லாம் கையூட்டு பெற்று செயல்படுகின்றனர் என ஆளுநர் கூறினாரே அதுகுறித்து பேசுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: தவறான தகவல்கள் தெரிவித்தால் நாங்கள் கேட்போம். 1400 கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி தந்தார் என தவறான தகவலை தெரிவித்தல் கூடாது.
முதல்வர்: அவர் எத்தனை கோப்புகளுக்கு ஒப்புதல் தந்தார் எனத் தெரியுமா?
அமைச்சர் கந்தசாமி: பல்வேறு திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் தாமதப்படுத்தினார்.
ஜெயபால்: இந்த ஆட்சியில் பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் துறையில் தொழில் தொடங்க கடன் எதுவும் தரவில்லை. சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்கலாம் எனக் கூறியுள்ளனர். எந்தத் தொகுதிக்கும் ஈமச்சடங்கு நிதி தரவில்லை.
தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் தொகுதியில் புதை சாக்கடைத் திட்டம் கிடப்பில் போட்டுள்ளனர். நிதி இல்லை எனக் கூறிவிடுகின்றனர். இலவசங்கள் ஏழைகளுக்கு மட்டும் தான் என்ற கருத்து குறித்து முடிவெடுக்கலாம்.
அமைச்சர் கந்தசாமி: ஏழைகளுக்கு மட்டுமே இலவசங்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வசதிப் படைத்தோருக்கு சலுகைகளை தவிர்க்க வேண்டும்.
தடையின்றி ஈமச்சடங்கு நிதி கிடைக்க வகை செய்யப்படும்.
அமைச்சர் கமலக்கண்ணன்: காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைத் தான் என்.ஆர். காங்கிரஸ் அரசு தொடர்ந்து செயல்படுத்தியது.
புதிய திட்டங்கள் ஏதாவது தொடங்கினீர்களா?.
அன்பழகன்: காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தொடங்கிய ரொட்டிப்பால் திட்டத்தை செயல்படுத்தினீர்களா?. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை?.
அமைச்சர் கமலக்கண்ணன்: கடந்த 5 ஆண்டுகளில் தான் ரொட்டிப்பால் திட்டத்தை ஒரு வேளை மட்டுமே செயல்படுத்தினர். தற்போது இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.