ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுவை, காரைக்காலில் உள்ள 5000 ஹோட்டல்கள், இனிப்பகங்களை வருகிற 30-ஆம் தேதி மூட புதுச்சேரி ஹோட்டல்கள் மற்றும் இனிப்பகங்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன் தலைவர் எஸ்.பாலு, பொதுச் செயலாளர் கே.சுதாகர், பொருளாளர் பி.ராமமூர்த்தி ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் சாதாரண உணவகங்கள் மீதான வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்கள், சுற்றுலாப் பயணிகள், கல்வி மற்றும் பணிகள் நிமித்தம் நகரங்களுக்கு வரும் மாணவர்கள் போன்றோர் தங்களது அன்றாட உணவுத் தேவைக்கு சாதாரண உணவகங்களையே நாடுகின்றனர்.
நம் மாநில அரசு, அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய உணவகங்கள் மீதான கூட்டு வரியை குறைந்த அளவில் நிர்ணயித்துள்ளது.
ஆனால், ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும் சரக்கு மற்றும் சேவை வரியால் வாடிக்கையாளர்கள் அதிகம் செலவிட நேரும். தற்போது வாட் வரியில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 லட்சத்துக்கு குறைவாக வியாபாரம் செய்யும் சிறு ஹோட்டல்கள் 0.5 சத வரியை அரசுக்கு செலுத்துகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இது 5 சதமாக மாறும்.
ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேலாக வியாபாரம் செய்யும் ஏசி வசதி இல்லாத ஹோட்டல்கள் வாட் வரியில் 2 சதமே வரியாக அரசுக்கு செலுத்துகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இது 12 சதமாக உயரும். ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேலாக வியாபாரம் செய்யும் ஏசி வசதி உள்ள ஹோட்டல்கள் இதுவரை வாட் வரியாக 2 சதமும், சேவை வரியாக 6 சதமும் சேர்த்து 8 சதம் அரசுக்கு செலுத்துகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இது 18 சதமாக மாறும்.
மேலே உள்ளவாறு சாதாரண உணவகங்களின் மீதான வரி பல மடங்கு உயர்த்தப்படுவதால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவர் சாதாரண உணவகங்களின் பொருள்கள் மற்றும் சேவை வரியைக் குறைவாக நிர்ணயிக்குமாறு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய நிதி அமைச்சர், நிதித் துறை அதிகாரிகள், பல மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், வணிகவரித் துறை அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தோம்.
ஆனால், வரி விகிதங்கள் பல மடங்கு உயர்த்தி நிர்ணயித்துள்ளனர். மத்திய அரசுக்கும் மீண்டும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதுவை, காரைக்காலில் வரும் 30-ம் தேதி 5000 ஹோட்டல்கள், இனிப்பகங்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.