புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக நிரந்தரத் தீர்வை உருவாக்க வேண்டும் என அரசுக் கொறடா ஆர்கே.அனந்தராமன் வலியுறுத்தினார்.
ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியது:
சந்திரபிரியங்கா (என்.ஆர்.காங்): கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து விட்டது. இந்தாண்டு வறட்சி நிவாரணம் கிடைக்குமா, கிடைக்காதா?
முதல்வர்: வரும் போது தெரிவிக்கிறேன்.
கொறடா அனந்தராமன்: புதுவை மாநிலத்தில் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வருகிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பத்திரப் பதிவு தடை உத்தரவால் இழப்பு, மதுக் கடைகள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்றவற்றை தனது சாதுர்யத்தால் சமாளித்து வருவாயை ரூ.1576.1 கோடியாக முதல்வர் உயர்த்தி உள்ளார்.
நிதி நிர்வாகம் என்பதை சீர்த்திருத்தம் செய்ததின் மூலம் 93.5 சதவீதம் முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மீது எங்களுக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை.
மக்களால் தேர்வு செய்ய்பட்ட ஆட்சி நடக்க வேண்டும் என பாடுபட்டு வருகிறோம்.
மாநிலத்தின் வளர்ச்சி 11.40 சதவீதமாக உள்ளது. தேசிய வளர்ச்சியை விட புதுவை வளர்ந்துள்ளது.
விவசாயிகள் நலனுக்காக இலவச மின்சாரம் தரப்பட்டது. கடன் தள்ளுபடி ஆணையும் வழங்கப்பட்டது. ஆனால், ஆளுநர் தான் அதைத் தடுக்க முயன்றார். எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடி வழங்கப்பட்டது. ஆனால், முந்தைய அரசு நிலுவைத் தொகையும் அதில் அடங்கும். சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.108 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செயற்கையாக நிதிப் பற்றாக்குறை உள்ளது. கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம்.
பட்ஜெட்டில் யூனியன் பிரதேசங்களுக்கான நிதி 15 சதவீதம் குறைந்து விட்டது.
தனிக் கணக்கு தொடங்கப்பட்டதால் பாதிப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசுவதால் பயன் இல்லை. சிறப்பு மாநில அந்தஸ்தை பெற வேண்டும். இதற்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். அசோக் ஆனந்து எழுந்து யூனியன் பிரதேசத்துக்கான பணி விதிகளை வாசித்தார். மாநில முன்னேற்றத்துக்காக தான் குரல் கொடுக்கிறோம். எனது தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. ஆளுநர் செய்த நல்லவற்றைத் தான் பாராட்டினேன்.
சில பிரச்னைகளை 4 சுவர்களுக்குள் தான் முடிக்க வேண்டும்.
அன்பழகன்: முதலில் அவர் தான் என்ன கூறினார் என்பதை உணர வேண்டும். உரிமை மீறல் குழுவின் செயல்பாட்டை களங்கப்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது.
லட்சுமி நாராயணன்: முந்தைய ஆளுநர் செயல்பாட்டோடு இப்போதைய ஆளுநர் செயல்பாட்டோடு ஒப்பிடக்கூடாது.
அமைச்சர் நமச்சிவாயம்: உரிமை மீறல் பிரச்னைக்கு ஆளான அதிகாரியிடம் தொடர்புடைய சட்டப்பேரவை உறுப்பினருடன் சென்று பேசுங்கள் என நானும் முதல்வரும் ஆலோசனை கூறினோம். எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் கூறியதை ஏற்று அதிகாரி செயல்படலாமா?
அமைச்சர் கமலக்கண்ணன்: துணைநிலை ஆளுநர் மாண்பை சபை கெடுத்தது போல் உறுப்பினர் அசோக் ஆனந்து பேசியுள்ளார். அவரது பேச்சை நீக்க வேண்டும்.
முதல்வர்: ஆளுநர் தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசக்கூடாது. அவரது உரை மீதான விவாதம் தொடர்பாக பேசுங்கள்.
கொறடா: ஆளுநர் தனது கட்டுரைப் பதிவில் குடியிருப்போர் சங்கங்களை தொடங்கி என்னை வந்து சந்தியுங்கள் எனக் கூறியுளளார்.
எம்.எல்.ஏக்களிடம் செல்ல வேண்டாம் எனக் கூறி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.