சுடச்சுட

  

  டெங்கு பாதிப்பு: மத்திய நிபுணர் குழுவை அனுப்ப அதிமுக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 01st October 2017 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் டெங்கு பாதிப்புகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி.நட்டாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பருவநிலை மாற்றம் காரணமாக புதுச்சேரியில் சமீப காலமாக டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்கள் வெகு தீவிரமாகப் பரவி வருகின்றன.
  நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் காய்ச்சல் பாதிப்புகளுடன் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்.
  இந்த நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கண்டறிய 24 மணி நேர ஆய்வக உதவியாளர்கள் இல்லை. இதனால் ரத்த மாதிரிகளை உடனடியாக பரிசோதனை செய்து என்ன வகையான காய்ச்சல் என்பதைக் கண்டறிய முடியவில்லை. மேலும், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் போதிய படுக்கை வசதிகள் இல்லை.
  டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்தால் ரத்தத்தில் பிளேட்லெட் அளவு குறையும். இதை சரிசெய்ய ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட் நோயாளிகளுக்கு ஏற்றப்படும். இந்த பிளேட்லெட் தன்னார்வலர்களின் ரத்த தானம் மூலம் பெறப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாத காரணத்தால் புதுச்சேரியில் ரத்த தானம் செய்யும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் ரத்த பிளேட்லெட் கிடைப்பது கடினமாகியுள்ளது.
  கடந்த காலங்களில் வீதி தோறும் நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்தைத் தெளித்து வந்தனர். தற்போது ஆள்கள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறையால் இந்தப் பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மக்கள் வந்தபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். அப்போது அரசு நிர்வாகம் விழித்துக் கொள்ளவில்லை.
  23 தொகுதிகளைக் கொண்ட புதுவை மாநிலத்துக்கு 5 கொசு ஒழிப்பு வாகனங்கள் போதுமானதாக இல்லை. இந்த வாகனங்களும் அமைச்சர்களின் தொகுதிகளில் மட்டுமே வலம் வருகின்றன.
  எனவே, மத்திய அரசு உடனடியாக புதுவை மாநில மக்கள் நலனைக் காக்கும் வகையில், நிபுணர் குழுவை உடனடியாக அனுப்பிவைத்து டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai