சுடச்சுட

  

  டெங்கு பாதிப்பு: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் பாஜகவினர் நலம் விசாரிப்பு

  By DIN  |   Published on : 02nd October 2017 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவோரிடம் மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை நலம் விசாரித்தார். அப்போது அவர்,  டெங்கு பாதித்தவர்களை சக நோயாளிகளோடு வைத்து சிகிச்சையளிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.
  புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே 2 பேர் டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  இந்த நிலையில், அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்த மாநில பாஜக தலைவர் சாமிநாதன், அங்கு டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளோர் சிகிச்சை பெறும் பிரிவுக்குச் சென்று பார்வையிட்டார். மேலும், சிகிச்சை பெற்று வருவோருக்கு அவர் ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவில் போதிய இட வசதிகள் இல்லாததால் இதர நோயாளிகளோடு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு நோய் பரிசோதிக்கும் இயந்திரம் பழுதானதால் அங்கு வரும் நோயாளிகள் அரசுப் பொது மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
  எனவே, அரசு மருத்துவமனையில் போதுமான இட வசதியை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார் அவர். இதுதொடர்பாக அரசுப் பொது மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், காய்ச்சல் பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்கு பொதுப் பிரிவில் சேர்த்து சிகிச்சையளிக்கப்படும். டெங்கு காய்ச்சல் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கு தனிப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai