புதுவையில் 700 சதவீதம் டெங்கு பாதிப்பு: ஆளுநர் தகவல்
By DIN | Published on : 02nd October 2017 08:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு 700 சதவீதம் அதிகரித்துள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு புதுவையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர், தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை கூட்டினார். ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார், நகராட்சி ஆணையர்கள் ரமேஷ், கணேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு 700 சதவீதம் அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பைத் தவிர்க்க மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். டெங்குவை ஒழிப்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
டெங்குவை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் தேவையான அனைத்து மருந்துகளையும் கூடுதலாக வாங்க புதுச்சேரி நிதித் துறை செயலரிடம் அறிவுறுத்தியுள்ளேன் என்றார் கிரண் பேடி.
உடனிருந்த அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார் கூறியதாவது: நிகழாண்டு சுமார் 2,000 பேருக்கு டெங்கு அறிகுறி இருந்ததால் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றவர்கள் உயிரிழக்கவில்லை. டெங்கு பாதிப்புக்கு வெளியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்தான் (2 பேர்) இறந்துள்ளனர். மருத்துவமனையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதைச் சமாளித்து வருகிறோம். பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ் கூறியதாவது: புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வாரத்துக்கு ஓர் நாள் தங்களது வீடு மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் பெருமளவு டெங்கு லார்வாக்களை ஒழித்து, நோயைக் கட்டுப்படுத்தலாம். இதுகுறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.