புதுவை காவல் துறை தின விழா
By DIN | Published on : 02nd October 2017 08:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவை காவல்துறை உதய தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரெஞ்சு ஆளுகையின் கீழ் இருந்த புதுச்சேரி கடந்த 1963-ஆம் ஆண்டு இந்தியாவோடு இணைந்தது. இந்த நிலையில் அதே ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி புதுவை காவல் துறை உதயமானது. இந்த தினத்தை புதுவை காவல் துறை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
அதன்படி, புதுச்சேரி கோரிமேடு காவல் மைதானத்தில் 54-ஆவது ஆண்டு உதய தின விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி. அபூர்வா குப்தா வரவேற்றார். ராஜீவ் ரஞ்சன், விஜே.சந்திரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பங்கேற்ற டி.ஜி.பி. சுனில்குமார் கெளதம் பேசியதாவது: 1963 அக்டோபர் 1-ஆம் தேதி புதுச்சேரி காவல் துறை தொடங்கப்பட்டு தற்போது 54-ஆவது ஆண்டு விழா கொண்ப்படுகிறது. புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதில் சிறப்பான பணியைக் காவல் துறை ஆற்றி வருகிறது.
புதுச்சேரி காவலர் பயற்சிப் பள்ளியில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் பறக்கும் புலிகள், கழுகு பார்வை போன்ற திட்டங்கள் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
காவலர்கள் தங்கள் பணியை மனித நேயத்துடன் செய்ய வேண்டும். சிறந்த பராமரிப்பு சேவைகளுக்காக முறையே பாகூர், தவளக்குப்பம், கிழக்குப் போக்குவரத்துக் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
காவலர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் செய்த கைவினைப் பொருள்கள் கண்காட்சியை டி.ஜி.பி. கெளதமின் மனைவி கிரண் கெளதம் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, காவலர்களின் குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்வில் எஸ்.பி.க்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர். காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் நன்றி கூறினார்.
முன்னதாக நடைபெற்ற காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை டி.ஜி.பி. சுனில் குமார் கெளதம் ஏற்றுக் கொண்டார்.