Enable Javscript for better performance
பூங்காக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆளுநர் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பூங்காக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆளுநர் நடவடிக்கை

    By DIN  |   Published on : 02nd October 2017 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தியால்பேட்டை வ.உ.சி. நகரில் நகராட்சி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
    வார இறுதி நாள்களில் கிரண் பேடி புதுவையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக 109-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முத்தியால்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
    ஆளுநர் மாளிகையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது, தங்கள்பகுதி பூங்காவில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது என்றும், பூங்கா நீண்ட நாள்களாகத் திறக்கப்படாமல் உள்ளது, எனவே அதைத் திறக்க வேண்டும் என்று வ.உ.சி. நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த பூங்காவில் கிரண் பேடி ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தினர், பொதுமக்கள் அவரை வரவேற்றனர். நகராட்சி ஊழியர்கள் பூங்காவைத் தூய்மை செய்து மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்திருந்தனர். ஆளுநர் கிரண் பேடியும் மரக்கன்றுகளை நட்டார். குழந்தைகளிடம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி வலியுறுத்தினார்.
    மேலும், சமூக விரோதிகள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில், அங்குள்ள கட்டடத்தைச் சீரமைத்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அங்கு பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தினார். மேலும், சமூக விரோதிகள் வருவதைத் தடுக்க ரோந்துக் காவலர்கள் சோதனை மேற்கொள்ளவும் ஆளுநர் உத்தரவிட்டார்.
    பின்னர், சோலை நகர் பூங்காவுக்குச் சென்று பார்வையிட்ட கிரண் பேடி அதைச் சிறப்பாகப் பராமரிக்கும் நகராட்சி ஊழியர்களை பாராட்டினார். அங்கு எரியாத உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
    இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் கணேசன்,  ஆளுநரின் தனிச் செயலர் ஸ்ரீதரன், ஆய்வாளர் பாஸ்கரன், பாதுகாப்பு அதிகாரி கார்த்திகேயன், நகராட்சி வருவாய் அதிகாரி பாலாஜி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai