Enable Javscript for better performance
மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 02nd October 2017 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடந்த ஜனவரி மாதம் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை  நெய்வேலி என்எல்சி நிர்வாகம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் கணேசனைச் சந்தித்து மனு அளித்திருந்தனர். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில்
    கடந்த 22-ஆம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், என்எல்சி நிர்வாகம் சார்பில் யாரும் பங்கேற்காததால் முத்தரப்புப் பேச்சு ரத்து செய்யப்பட்டது.
    இந்த நிலையில், பணி நிரந்தரம், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி, அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் முன் தேதியிட்டு வழங்குதல், தீபாவளி போனஸை 20 சதவீதமாக உயர்த்துதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் (ஏஐடியூசி) புதுச்சேரியில் உள்ள மத்திய  தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற என்எல்சி நிர்வாகம் முன்வராவிட்டால், அடுத்த மாதம் 3 ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்து, அதன் பிறகு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதில், நிரந்தரத் தொழிலாளர்களும் கலந்து கொள்வர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
    ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் சேகர், ஜீவா தொழிற்சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச் செயலர் செல்வமணி, சிறப்புத் தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் கல்யாணசுந்தரம், அலுவலகச் செயலர் திருஞானம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai