சுடச்சுட

  

  ஆதிதிராவிடர் மேம்பாட்டு நிதி ரூ.6.30 கோடி வீணடிப்பு: ஆளுநரிடம் புகார்

  By DIN  |   Published on : 03rd October 2017 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க ஆதிதிராவிடர் மேம்பாட்டு நிதி ரூ.6.30 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது என ஆளுநர் கிரண் பேடியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
  இதுகுறித்து ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
   புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஆதிதிராவிட மாணவர்கள் மற்றும் அந்த சமூக மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பல கோடி நிதி அளிக்கப்படுகிறது.
  ஆனால், இந்த நிதியை தேவையின்றி எடுத்து பல்வேறு இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டதற்கு,  கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2017-ஆம் ஆண்டு ஜூலை வரை ஓராண்டு காலத்திற்குள் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 175 இடங்களில் ரூ.6.30 கோடி செலவில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
  பொதுவாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மற்றும் முக்கிய சந்திப்புகளில் தான் இந்த வகை விளக்குகள் அமைப்பார்கள்.ஆனால், வீதி விளக்கு போல் தேவையற்ற இடங்களில் எல்லாம் உயர்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, பல இடங்களில் நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையால் அமைக்கப்பட்ட விளக்குகள் பராமரிப்பின்றி  எரியாமலும், கம்பங்கள் சாய்ந்தும் கிடக்கின்றன. இந்நிலையில் ரூ.6.30 கோடி செலவு செய்து உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
   இதனால், ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது.
  ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்களை பெற விண்ணப்பித்த பயனாளிகளுக்கு நிதி இல்லை எனக் காரணம் கூறி பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தாத நிலையில், கோடி கணக்கில் செலவு செய்து உயர்கோபுர விளக்குகள் மட்டும் அமைத்தது எப்படி?
   இந்த விளக்குகள் அமைக்க நியமன ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடத்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இதுகுறித்து துறை ரீதியான உரிய விசாரணை நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அதில் வலியுறுத்தியுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai