புதுவையில் காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாள்
By DIN | Published on : 03rd October 2017 10:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவையில் காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு தினத்தையொட்டி அவர்களது சிலைகளுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தலைவர்கள் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 148-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு செய்தி விளம்பரத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி முதலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர் ஷாஜகான், டிஜிபி சுனில்குமார் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக மும்மத சிறப்பு பிரார்த்தனைகள், தேசப்பக்திப் பாடல்களும் இசைக்கப்பட்டன. இதேபோல, காமராஜர் நினைவு தினமும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, ராஜா திரையரங்கம் அருகில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜஹான், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காந்தி, காமராஜர் படங்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுச் செயலர் வி.பாலன், பேரவை முன்னாள் தலைவர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்து, டிபிஆர்.செல்வம், சுகுமாறன், கோபிகா, கட்சி நிர்வாகிகள் ரேவதி பற்குணன், ஞானசேகரன், முனுசாமி, வேல்முருகன், லூயி கண்ணையா உள்பட பலர் பங்கேற்றனர்.
திராவிடர் கழகம் சார்பில் காமராஜர் சிலைக்கு தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மண்டல தலைவர் ராசு, புதிய நீதி கட்சியினர் மாநிலத் தலைவர் பொன்னுரங்கம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.