Enable Javscript for better performance
போராடி நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்: முதல்வர் நாராயணசாமி- Dinamani

சுடச்சுட

  

  போராடி நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்: முதல்வர் நாராயணசாமி

  By DIN  |   Published on : 03rd October 2017 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசையும், இங்கே இருப்பவர்களையும் எதிர்த்து போராடி நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என முதல்வர் நாராயணசாமி சாடினார்.
  புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு தின நிகழ்ச்சி திங்கள்
  கிழமை நடைபெற்றது.
  இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு தலைவர்களின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திப் பேசியதாவது:
  நாம் சுதந்திரம் பெறுவோம், ஆட்சிக்கு வருவோம் என சிந்திக்காமல் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தலைவர்கள். அதற்கு வழிகாட்டியாக இருந்தவர் காந்தி. சுதந்திரத்திற்குப்பின் நேரு தலைமையில் மிகப்பெரிய வளர்ச்சியை நாடு பெற்றது.
  எளிமையான பிரதமராக இருந்தவர் லால்பகதூர் சாஸ்திரி. எளிமையான முதல்வராக இருந்து காங்கிரஸ் தலைவர் ஆனவர் காமராஜர். தலைவர்களின் வழியில் நாம் நடக்க வேண்டும்.
  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் நடந்ததாக மோடி கூறி வருகின்றார். பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் மருத்துவ இடங்கள் வழங்குவதில் வியாபம் ஊழல் நடைபெற்றது. இந்த ஊழலில் சாட்சிகளாக உள்ள 24 பேர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் 55 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.  சத்தீஸ்கரில் அரிசி வாங்கியதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் குஜராத் பெட்ரோலியம் கார்ப்பரஷேன் ஆரம்பிக்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அந்த நிதி என்ன ஆனது எனத் தெரியவில்லை.
  பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்த ஊழலை பட்டியல் போட்டு கொடுத்தால் விசாரணை நடத்துவதில்லை.
  தற்போது சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகின்றனர். இதையெல்லாம் காங்கிரஸ் பார்த்ததுதான்.
  ரூபாய் மதிப்பு இழப்பால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது கட்சியைச் சேர்ந்த தலைவர்களே கூறி வருகின்றனர்.
  தமிழகம், புதுச்சேரியில் பாஜக பகல் கனவு கண்டாலும் ஓர் இடம்கூட வெற்றி பெற முடியாது. ஏனென்றால் இந்தித் திணிப்பு, விவசாய கடன் தள்ளுபடிக்கு நடவடிக்கை இல்லை. மானியம் கொடுக்கும் மத்திய அரசின் திட்டங்களை எடுப்பது ஆகியவைகளை செய்து வருகின்றனர்.
  மத்திய அரசின் பொருளாதார கொள்கை சரியில்லை, வளர்ச்சி இல்லை, வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது  என்று அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்களே கூறுகின்றனர்.
  பிரெஞ்சு குழுவினர் வரும்
  9-ஆம்  தேதி புதுச்சேரி வருகின்றனர். அதன்பிறகு பொலிவுறு நகர திட்டம் தொடங்கப்படும்.
  நானும், அமைச்சர்களும் தீவிரமாக நடவடிக்கை எடுத்ததால் டெங்கு பாதிப்பு 15 சதவீதம் குறைந்துள்ளது.  அரசு மருத்துவமனையில் யாரும் சாகவில்லை, தனியார் மருத்துவமனையில் 2 பேர் இறந்துள்ளனர்.
  ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
  கடந்த 4 நாள் விடுமுறை நாள்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். புதுச்சேரியில் தங்க இடமில்லாததால் கடலூரில் தங்கி வருகின்றனர். தொழிற்சாலை ஆரம்பிக்க 400 மனுக்கள் வந்துள்ளன. நிதிப் பற்றாக்குறை காரணமாக திட்டங்கள் மெதுவாக நடக்கின்றன. மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணத்தை தரவில்லை. இருந்தாலும், புதுவையில் சிறப்பான ஆட்சியை கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
  மத்திய அரசையும், இங்கு இருப்பவர்களையும் எதிர்த்து போராடிக்கொண்டு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றார் நாராயணசாமி.
  அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து,   எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பாலாஜி, பெத்தபெருமாள், விநாயகமூர்த்தி,  நீலகங்காதரன், தேவதாஸ், பொது செயலாளர் ஏகேடி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai