சுடச்சுட

  

  வரும் ஆண்டில் டெங்கு தடுப்பு செயல்திட்டம்: ஆளுநர் கிரண் பேடி தகவல்

  By DIN  |   Published on : 03rd October 2017 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் ஆண்டில் டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு செயல்திட்டம் அமல்படுத்தப்படும் என  துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
  புதுவையில்  டெங்கு பாதிப்பு கடுமையாக உள்ளது. ஏற்கெனவே, 2 பேர் உயிரிழந்த நிலையில், 1000-க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறிகளுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  தற்போது அரசு மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  இந்நிலையில், அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆளுநர் கிரண் பேடி ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிறப்பு வார்டுக்குச் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  கடந்த ஆண்டில் 67 பேரிலிருந்து இந்தாண்டு 600 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் படுக்கை வசதி கூட இல்லாத நிலைமை உள்ளது. இதனை போர்க்கால அடைப்படையில் சரிசெய்யவேண்டும். டெங்குவை கட்டுப்படுத்துவதில் அனைவருக்கும் பங்குள்ளது.
  குறிப்பாக, அரசின் அனைத்துத் துறைகளும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து வீடு வீடாகவும், கடை  கடையாகவும், வீதி வீதியாகவும் சென்று தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும்.
  குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்களே இதற்கான பணியில் ஈடுபடுவர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்போர் நலச்சங்கம், மார்க்கெட் சங்கங்கள், வியாபாரிகள் சங்கத்தினரும், இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.   டெங்கு பாதிப்பு தொடர்பாக தேவையான மருந்துகள், சிகிச்சை வசதிகளை தயாராக வைத்திருக்கவும், அதற்கு தனியாக நிதி ஒதுக்கி செலவிடவும் அறிவுறுத்தி உள்ளேன்.
  வரும் ஆண்டு முதல் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக, நோய் பாதிப்பு தொடர்பான  விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
  மருத்துவர்கள் சிகிச்சை மட்டுமே தருவர். டெங்கு வராமல் தடுப்பது நமது கைகளில் தான் உள்ளது என்றார்.  அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார், உள்ளிருப்பு அதிகாரி ரவி, துணை இயக்குநர் ரகுநாதன், ரத்த வங்கி தலைமை அதிகாரி ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai