சுடச்சுட

  

  அரசு சட்டக் கல்லூரியில் மாதிரி நீதிமன்றப் போட்டிகள்: முதல்வர் நாராயணசாமி தகவல்

  By  புதுச்சேரி,  |   Published on : 04th October 2017 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டிகள் நடைபெற உள்ளன என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
   அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   புதுச்சேரி சட்டக் கல்லூரியில் மாணவர்களின் வாதாடும் திறனை மேம்படுத்த வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மாதிரி நீதிமன்றப் போட்டிகள் நடைபெற உள்ளன.
   தேசிய அளவில் புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில்தான் முதல் முதலில் மாதிரி நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை நாற்பது நீதிமன்றப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 37 ஆங்கிலத்திலும், 3 தமிழிலும் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் 42 சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
   இதை அமைச்சர் கமலக்கண்ணன் தொடக்கி வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாமிநாதன், கோவிந்தராஜ் ஆகியோர் சிறந்தவர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் நான் பங்கேற்று பரிசு வழங்க உள்ளேன்.
   மாஹே பிராந்தியத்துக்கு தூய்மை விருது: புதுவையில் உள்ள மாஹே பகுதி மிக சுத்தமான பகுதி என வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 4 பிராந்தியங்களை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
   டெங்கு பாதிப்பை குறைக்க அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்படுவதற்கான அமைப்பை ஏற்படுத்த 2 நாள்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
   படகு வாங்கிய விவகாரம்: அரசுக்குத் தெரியாமல், அரசின் கவனத்திற்கு கொண்டு வராமல் 2 படகுகள் வாங்கியதில் ஊழல் என்று மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தலைமைச் செயலரிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கேட்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல் கடிதம் எழுதியிருப்பது விதிமுறை மீறிய செயலாகும். ஒரு புகார் வந்தால் சம்மந்தப்பட்ட அமைச்சர், செயலருக்குத்தான் கடிதம் அனுப்ப வேண்டும். அவர்கள் விசாரணை செய்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவந்து, பின்னர் ஆளுநருக்கு கொண்டு செல்வதுதான் வழக்கம்.
   அன்றாட அரசு வேலைகளை கண்காணிப்பது, நிர்வாகத்தை நடத்துவதில் முதல்வருக்கும், அமைச்சருக்கும்தான் உரிமை உள்ளது. நிர்வாகத்தில் தலையிட உரிய அதிகாரம் உள்ளதாக ஆளுநர் பேட்டி அளித்து வருகிறார்.
   படகு வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி விடுவது நிர்வாக ரீதியான விஷயம். இதில் தவறு நடந்திருந்தால் அதற்கும், நீதிமன்ற அதிகாரத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இது குறித்து அரசின் கவனத்திற்குத்தான் கொண்டு வரவேண்டும்.
   மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்புவதற்கு முன்பு துறை செயலர், அமைச்சர், முதல்வருக்கு அனுப்பியிருக்க வேண்டும். இதுகுறித்து மத்திய கண்காணிப்பு ஆணையருக்கு கடிதம் எழுதவுள்ளேன்.
   விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய ஆளுநர் இடையூறாக உள்ளார். இதனால் விவசாயிகளுக்கு மீண்டும் கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
   ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அவரை நாங்கள் ஏகமனதாக தேர்ந்தெடுப்போம்.
   புதுவை துறைமுக முகத்துவாரம் தூர் வாரும் பணி முடிவடைந்துள்ளது. கப்பல் வந்து செல்லும் நீர்வழியை தூர்வார மண்வாரும் இயந்திரத்தை சென்னை துறைமுகத்திடம் கேட்டுள்ளோம். அது வந்தவுடன் பணிகள் முடிக்கப்பட்டு சரக்குப் போக்குவரத்து மாத இறுதியில் தொடங்கப்படும் என்றார் நாராயணசாமி.
   அமைச்சர் கமலக்கண்ணன், லட்சுமி நாராயணன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai