சுடச்சுட

    

    புதுச்சேரி அருகே இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸார் தடியடி, துப்பாக்கிச் சூடு

    By  புதுச்சேரி,  |   Published on : 04th October 2017 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியை அடுத்த பாகூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.
     பாகூரை அடுத்த சேலியமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மர்ம நபர்கள் திங்கள்கிழமை அந்தப் படத்தை சேதப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. அரங்கனூரைச் சேர்ந்தவர்கள்தான் அம்பேத்கர் படத்தை சேதப்படுத்திவிட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலியமேடு கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     தகவல் அறிந்த பாகூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களைக் கலைந்து போகுமாறு கேட்டுக் கொண்டும் அவர்கள் செல்லவில்லை. பின்னர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
     போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போகும் போது அந்தப் பகுதியில் இருந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர் வீட்டை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சேலியமேடு-அரங்கனூர் மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. இதனால் கூட்டத்தைக் கலைக்க போலீஸார் வானை நோக்கி இரண்டு சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
     இந்த நிலையில், அரங்கனூர் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக அரங்கனூர் பேட் பகுதி மக்களும் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இதற்கிடையே, சேலியமேடு கிராம மக்களும் உடைந்த அம்பேத்கர் படத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
     அப்போது, அரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அந்த வழியாக வந்தபோது, சேலியமேடு கிராமத்தினர் அவர்களைத் தாக்க முயற்சித்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீஸார் அங்கு சென்று வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போகுமாறு கூறியும் செல்லவில்லை. இதனால், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
     இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் பாகூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai