ஆமை பிடிக்க குளத்தில் இறங்கியவர் சேற்றில் சிக்கி சாவு
By புதுச்சேரி, | Published on : 05th October 2017 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கிருமாம்பாக்கம் அருகே ஆமை பிடிக்க குளத்தில் இறங்கியவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
பண்ருட்டியை அடுத்த அங்குச்செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (50). இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் விஜயகுமார். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அண்ணாமலை குடும்பத்துடன் கன்னியக்கோயிலில் தங்கியிருந்தார்.
அவரது மனைவி வண்ணான்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் செவ்வாய்க்கிழமை துணி துவைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குளத்தின் மறு கரையில் நின்றிருந்த அண்ணாமலை ஆமை பிடிக்க குளத்தில் இறங்கினார். அப்போது சேற்றில் சிக்கிக் கொண்டதால் நீரில் மூழ்கினர்.
அப்போது தோளில் வைத்திருந்த மகனை கரையில் வீசி எறிந்தார். இதைக் கண்ட அவரது மனைவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அண்ணாமலை சேற்றில் மூழ்கி இறந்தார். பின்னர் அவருடைய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இது தொடர்பான புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.