சுடச்சுட

  

  மத்திய கண்காணிப்பு ஆணையத்தை நாடியது ஏன்? கிரண் பேடி விளக்கம்

  By  புதுச்சேரி,  |   Published on : 05th October 2017 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் தலைமைச் செயலரே கண்காணிப்பு அதிகாரியாக உள்ளதால், படகுகள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாக மத்திய கண்காணிப்பு ஆணையத்தை (சிவிசி) நாடியதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
   கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் சொகுசுப் படகுகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஆளுநர் கிரண் பேடி மத்திய கண்காணிப்பு ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். இந்தப் புகாருக்கு பதிலளிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் புதுவை தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
   இந்த நிலையில், அரசில் தவறு நடைபெற்றிருந்தால், அது தொடர்பான புகார் முதலில் சம்பந்தப்பட்ட துறைச் செயலருக்கும், பின்னர் அமைச்சருக்கும், அதன் பின்னர் முதல்வருக்கும், இறுதியில் ஆளுநருக்கும்தான் செல்ல வேண்டும். ஆனால், நேரடியாக ஆளுநர் தனக்கு வந்த புகாரின் மீது விசாரணை நடத்த மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இது அரசு நிர்வாகத்தில் குறுக்கீடு, விதிமீறல் என முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார்.
   இதுதொடர்பாக ஆளுநர் கிரண் பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
   நிர்வாகி என்ற முறையில் நான் எனது கடமையைத்தான் செய்கிறேன். எதில் இருந்தும் நான் விலகிச் செல்லவில்லை என்பதை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வேறு வகையில் மாற்றப்படாமல் இருப்பதை நான் உறுதி செய்ய வேண்டும்.
   அத்தகைய கோப்புகளை அனுமதிக்கும்போது அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது. இதை விதிகளின் கீழ் உறுதி செய்ய வேண்டியது எனது பொறுப்பு.
   புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு என தனி கண்காணிப்பு அதிகாரி இல்லை. தலைமைச் செயலரே கண்காணிப்பு அதிகாரியாக இருந்து முதல்வருக்கும் பதில் தர வேண்டியுள்ளது. அவரால் தனித்து இயங்க முடியாது. எனவேதான், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி உள்பட பல்வேறு விஷயங்களுக்காக சிவிசி, சிபிஐ போன்ற அமைப்புகளை நாட வேண்டி இருந்தது.
   தலித்துகள் மேம்பாட்டுக்கான நிதியை பாட்கோ உயர் மின் கோபுர விளக்குகள் அமைத்து வீணடித்துள்ளது. இதற்கான அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளோம்.
   தேசிய தலித்துகள் ஆணையத்துக்கு இந்த முறைகேடு குறித்தும், அதைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் கடிதம் எழுத நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.
   ஏற்கெனவே, வாய்மொழியாக தேசிய தலித்துகள் ஆணைய துணைத் தலைவரிடம் கூறியுள்ளேன்.
   புதுவை அரசு நிர்வாகத்தில் நேர்மையை ஏற்படுத்துவதுதான் மிகப் பெரிய சவாலாக உள்ளது. நான் முதல்வரின் ஒத்துழைப்பையே எதிர்பார்க்கிறேன். விரோதம், எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. தலித்துகள் மேம்பாட்டுத் திட்ட நிதியைச் செலவிட்டது தொடர்பாகவும் சிவிசிக்கு விசாரிக்க எழுதியுள்ளேன். அனைத்துச் செயல்களையும் எனது அதிகார வரம்புக்கு உள்பட்டே மேற்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai