சுடச்சுட

  

  ஆளுநரைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருக்க அமைச்சர் கந்தசாமி முடிவு

  By  புதுச்சேரி,  |   Published on : 06th October 2017 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள மத்திய அரசு மற்றும் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து நாடாளுமன்றத்தின் முன்பு உண்ணாவிரதம் இருக்க உள்ளேன் என நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
   புதுச்சேரி கட்டடத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுக் கூப்பன் வழங்கும் விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:
   புதுவைக்கு திறமையான முதல்வர் கிடைத்துள்ளார். ஆனால், அவரால் செயல்பட முடியவில்லை. அவரது உழைப்பு வீணாவிடாது. எதிர்காலத்தில் நிச்சயம் உதவும்.
   முதல்வரிடம் பேசும்போது இலவச அரிசி, துணி, துறைமுகம் தூர்வாருவது, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் என எதையும் செயல்படுத்த முடியவில்லை.
   எதுக்காக இந்த ஆட்சியில் இருக்கிறோம் என மனம் நொந்து கூறினேன். ஆளுநர் கிரண் பேடி, நிதிச் செயலரை கையில் வைத்துக் கொண்டு, இலவச அரிசிக்கான கோப்பைத் தேவையில்லாமல் சுற்ற விடுகிறார். இதனால், ஏழை மக்களுக்கு அரிசி வழங்க முடியவில்லை.
   சமீபத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சிபிஐயிடம் ஆளுநர் புகார் கூறியதால், பல நேர்மையான அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
   இதனால், அரசு அதிகாரிகள் கோப்புகளுக்குக் கையெழுத்துப் போட பயப்படுகிறார்கள். இப்படி இருந்தால் திட்டங்களை எப்படிச் செயல்படுத்த முடியும்?
   எந்த நலத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் நான் ஏன் அமைச்சராக இருக்க வேண்டும். எனவே, சோனியா காந்தியை சந்தித்து என்னுடைய பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக முதல்வரிடம் தெரிவித்தேன். உடனே அவர் என்னை சமாதானம் செய்தார். நான் ஒரு குடிமகன் என்ற முறையில் மாநிலத்துக்கு நிதி தராத மத்திய அரசையும், திட்டங்களைச் செயல்படுத்தத் தடையாக உள்ள மாநில ஆளுநரையும் கண்டித்தும் வருகிற ஜனவரியில் நாடாளு
   மன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
   பிரெஞ்சுகாரர்களிடம் இருந்து புதுவைக்கு சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்துப் போராடி சுதந்திரம் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
   புதுச்சேரியில் சதித் திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதனை முறியடிக்க முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பொதுமக்கள் துணை இருக்க வேண்டும் என்றார் அவர். அதே நேரம், 2018-ஆம் ஆண்டு அரசு டைரி, காலண்டரில் தனது பெயரை அச்சடிக்க வேண்டாம் என முதல்வருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai