சுடச்சுட

  

  முதல்வர், பேரவைத் தலைவர் தொகுதிகளில் டெங்கு பாதிப்புகள் குறித்து ஆளுநர் கிரண் பேடி ஆய்வு

  By  புதுச்சேரி,  |   Published on : 06th October 2017 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டெங்கு பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தொகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
   புதுச்சேரியில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 1,800-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் புதுவையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
   டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
   இதனிடையே, டெங்கு காய்ச்சலைக் காட்டுப்படுத்த அரசு சார்பில் வாய்க்கால்கள் சுத்தப்படுத்துவது, நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி, கிராமப்பகுதிகளிலும் கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
   இந்த நிலையில் வியாழக்கிழமை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி முதல்வரின் தொகுதியான நெல்லித்தோப்பு, பேரவைத் தலைவரின் தொகுதியான காமராஜர் நகர் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
   மாவட்ட ஆட்சியர் வல்லவன், உள்ளாட்சித் துறை இயக்குநர் மன்சூர், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கணேசன், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வின்போது அந்தப் பகுதி மக்களிடம் குப்பைகளை வீதியில் கொட்டக் கூடாது, அருகில் உள்ள காலி மனைகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
   மேலும், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களிடம் டெங்கு பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர். புதுச்சேரியில் வீதிகளில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டினால் ரூ. 100 முதல் 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், அப்படி மீறும் பட்சத்தில் நகராட்சியே அவற்றைச் சுத்தம் செய்து மேலும் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் எச்சரித்தார்.
   துணைநிலை ஆளுநர் - முதல்வரிடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், முதல்வர், பேரவைத் தலைவர் தொகுதிகளில் ஆளுநர் கிரண் பேடி ஆய்வு மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai