சுடச்சுட

    

    காரைக்காலில் 12 தொழில் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு

    By  புதுச்சேரி,  |   Published on : 07th October 2017 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் 12 புதிய தொழில் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி தொழில் உயர்வு அபிவிருத்தி மற்றும் முதலீட்டுக் கழகம் (பிப்டிக்) தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து பிப்டிக் மேலாண் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் பிராந்தியம், போலகம் கிராமத்தில் 597 ஏக்கர் நிலத்தில் பிப்டிக் தொழில் வளர்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திலுள்ள நிலம் தொழில் முனைவோர்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதல்கட்டமாக 12 தொழில் முனைவோர்களுக்கு கடந்த ஜனவரி மாதமும், இரண்டாம் கட்டமாக 7 பேருக்கு மே மாதமும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது மேலும் சுமார் ரூ.250 கோடி முதலீடு செய்யக்கூடிய 12 புதிய தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 60 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான ஆணை தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகானால் வெள்ளிக்கிழமை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. காரைக்கால் தொழில் வளர்ச்சி மையத்தில் இந்தத் தொழில்சாலைகள் நிறுவப்பட உள்ளதால் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
     பிப்டிக் நிறுவனம் மீதமுள்ள நிலத்தையும் ஒதுக்கீடு செய்து மேலும் பல புதிய தொழில்சாலைகள் அமைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி அரசின் புதிய தொழில் கொள்கையின் அடிப்படையில் சேதாரப்பட்டு, கரசூர் பகுதிகளில் அமைக்கப்பட உள்ள புதிய தொழில்பேட்டையில் பல தொழில் முனைவோர் தொழில் தொடங்க ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதன் மூலம் மேலும் பல தொழில்சாலைகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai