சுடச்சுட

  

  டெங்கு பாதிப்பு சிகிச்சைக்கு ரத்த தானம் அளிக்க ஆளுநர் அழைப்பு

  By  புதுச்சேரி,  |   Published on : 07th October 2017 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரத்தம் தேவைப்படுவதால் தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்க முன்வர வேண்டுமென துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேட்டுக்கொண்டார்.
   தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
   டெங்கு தடுப்பு நடவடிக்கையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோர் தனித் தனியே ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
   இந்த நிலையில் வியாழக்கிழமை சபாநாயகர் வைத்திலிங்கத்தின் தொகுதியான காமராஜர் நகர் தொகுதிக்குள்பட்ட கிருஷ்ணா நகர், முதல்வர் நாராயணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.
   தொடர்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள டி.வி. நகர் பகுதியில் கழிவுகள் அகற்றுதல், துப்புரவு, கொசு மருந்து தெளிக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் கிரண் பேடி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   டெங்கு ஒரு கொடிய நோய். புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
   அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிகளவில் ரத்தம் தேவைப்படுவதால் தன்னார்வலர்கள் ரத்த தானம் அளிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
   மேலும், மக்களிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சனிக்கிழமை காலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து 5 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்றார்.
   "அமைச்சர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்'
   செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கிரண்பேடி பேசுகையில், அமைச்சர்கள் தங்களது துறை ரீதியிலான பிரச்னைகள் தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புகொள்ளலாம். அதனை தீர்த்து வைப்பதில் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். இதுதொடர்பாக ஏற்கெனவே அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai