Enable Javscript for better performance
புதுவையில் 2 ஆயிரம் பேருக்கு டெங்கு அறிகுறி: மாவட்ட ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் 2 ஆயிரம் பேருக்கு டெங்கு அறிகுறி: மாவட்ட ஆட்சியர்

    By  புதுச்சேரி,  |   Published on : 07th October 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mos

    புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சுமார் 2 ஆயிரம் பேர் டெங்கு அறிகுறியோடு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: புதுவை அரசு பொது மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறியோடு 2 ஆயிரம் பேருக்கும் மேல் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு நலவழித் துறை, உள்ளாட்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை, என்எஸ்எஸ், நேரு இளையோர் மன்றம் ஆகியவற்றை ஒன்றிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    நலவழித் துறையில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் ஒன்றுதான் உள்ளது. இந்த இயந்திரம் அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமானதாக இல்லை. எனவே, கால்நடை பராமரிப்புத் துறையில் உள்ள 8 புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களைப் பெற்று, பிராந்தியம் முழுவதும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியிலும் தலா 50 தெளிப்பான்கள் வாங்கி, கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அரசு, தனியார் பள்ளிகளில் படித்துவரும் 2.10 லட்சம் மாணவர்களுக்கு தொடர்ந்து 3 நாள்களுக்கு இருவேளையும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும். இந்தப் பணிகளை ரோட்டரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்கிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது. எனவே, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 4 ஆயிரம் என்எஸ்எஸ் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

    மேலும், புதுவையில் செயல்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட இளைஞர் மன்றங்களின் சார்பில் தலா 25 பேர் ஒவ்வொரு கிராமத்திலும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுவினரையும் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபடுத்த உள்ளோம்.

    மக்கள் அதிகம் கூடுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து நிலவேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு குடிநீர் கையிருப்பில் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காலிமனை உரிமையாளர்கள் அனைவரும் வருகிற 12 நாள்களுக்குள் அவர்களுக்குச் சொந்தமான காலிமனைகளை சுத்தப்படுத்தி முறையாகப் பராமரிக்க வேண்டும். தவறினால் அவர்களுக்கு அபராதமோ அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனையோ விதிக்க வாய்ப்புள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சூழல் மிகவும் அபாயகரமானது. எனவே பொதுமக்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai