சுடச்சுட

  

  மழைக் கால ஆயத்தப் பணிகளில் அரசு தீவிர கவனம்: அமைச்சர் ஏ.நமச்சிவாயம் உறுதி

  By  புதுச்சேரி,  |   Published on : 07th October 2017 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் ஏ.நமச்சிவாயம் கூறினார்.
   புதுச்சேரியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். கண்காணிப்புப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
   கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் மழைக் காலம் தொடங்க உள்ளதால் ஏரி, குளம், கால்வாய்கள் தூர்வாரப்படும். மழைக் காலத்தில் சாலையில் விழும் மரங்களை உடனடியாக அகற்ற இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், மழைநீர் தேங்குவதை உடனடியாக சரி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் உப்பனாறு வாய்க்கால் முகத்துவாரம் தூர்வாரப்பட உள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி தேவைப்படுகிறது என்றார்.
   மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது: பொதுப்பணித் துறை மூலம் ஏரி, குளங்களை தூர்வார சுற்றுச்சூழல் துறை ரூ.2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 20 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமார் ரூ.60 லட்சத்தில் 15 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 5 ஏரிகளில் தண்ணீர் இருப்பதால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. தற்போது தூர்வாரப்பட்ட ஏரிகளில் மரக்கன்றுகள் நடுவது, மதகுகளை சீரமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
   விவசாயிகள் ஏரி, குளங்களிலிருந்து இலவசமாக வண்டல் மண் எடுப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறைகள் இணைந்து டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
   புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஆளுநர் ஒத்துழைப்பு தருவார் என காத்திருந்தோம். ஆனால் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துதான் ஆட்சிக்கு வருகிறோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான வழியில் போராடி வருகிறோம். ஆளுநரின் செயல்பாடு குறித்து எங்களது கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளோம். நேரம் வரும்போது இந்தப் பிரச்னையில் அவர்கள் தலையிடுவார்கள் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai