சுடச்சுட

  

  தலித் என்பதால் ஆளுநர் என்னை அவமதிக்கிறார்க: அமைச்சர் கந்தசாமி புகார்

  By DIN  |   Published on : 08th October 2017 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தலித் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் ஆளுநர் கிரண் பேடி தன்னை அவமதிப்பதாக புதுவை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி புகார் கூறினார்.
  கோரிமேடு அன்னை தெரசா கல்லூரியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு பேசியதாவது: டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளனர்.
  ஆனால், ஆளுநர் கிரண் பேடி மேற்கொண்ட நடைபயணத்தால் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
  புதுவை சிறிய மாநிலம். மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றுத்தான் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.
  புதுவை மாநில நிர்வாகியாக இருக்கும் ஆளுநர் கிரண் பேடி பல கோப்புகளில் கையெழுத்துப் போடாததால் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை.
  இதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறி ஆளுநர் மற்றும் முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன்.
  உடனே ஆளுநர் கிரண் பேடி என்னைச் சந்தியுங்கள். சி.பி.ஐ.க்கு உங்களுடைய குற்றம் தொடர்பான கோப்புகளை அனுப்புவதற்கு முன் அதைக் காட்டுகிறேன் என்றார்.
  இதையெல்லாம் பார்த்து நான் பயப்பட மாட்டேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஏழை குடும்பத்தில் பிறந்து 3-ஆவது முறையாக அமைச்சராகி இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யவே இந்தப் பதவியில் இருக்கிறேன்.
  நான் ஆங்கிலம் படிக்கவில்லை. ஆனால், பிரதமர், அமைச்சர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்கும் போது, எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எனது கருத்தை அவர்களுக்குப் புரிய வைத்துள்ளேன்.
  அதிகம் படிக்காத, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அமைச்சரைக் கொச்சைபடுத்தும் வகையில், ஆளுநர் மாளிகைக்கு வரும்போது மொழி பெயர்க்க மகனை அழைத்து வாருங்கள் என்று பேசியிருக்கும் ஆளுநர் கிரண் பேடியின் செயல் கண்டிக்கத்தக்கது.
  நான் ஆளுநரைச் சந்திக்க தயார். அதற்கு முன் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு கையெழுத்துபோட அவர் தயாரா?
  ஆளுநர் தனது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். நான் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக உள்ளேன்.
  மாநிலத்தில் நிதியில்லாமல் கஷ்டப்படுகிறோம். அனைத்துச் சமுதாய மக்களுக்கும் தேவையான வசதிகளைச் செய்ய முடியாத நிலை உள்ளது.
  எனவே, ஆளுநர் கிரண் பேடி மாநிலத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தரவேண்டும். அப்போதுதான் புதுவை மாநிலம் வளர்ச்சி பெறும் என்றார் கந்தசாமி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai