சுடச்சுட

  

  துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்கள்: தமிழகம், புதுவை பின்தங்கியுள்ளன: தேசிய ஆணைய உறுப்பினர்

  By DIN  |   Published on : 08th October 2017 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம், புதுவை, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் பின்தங்கி உள்ளதாக தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மானி தெரிவித்தார்.
  புதுவையில் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக வந்திருந்த அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  புதுச்சேரியில் மொத்தம் 700 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் நிலையை ஆய்வு செய்வதற்காக வந்தேன்.ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்த போது, புதுவையில் நிலவும் இரு முக்கிய பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தேன்.
  குறிப்பாக, திறந்த வெளிக் கழிவு நீர் வாய்க்கால்கள், அவற்றை மூட பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கிரண் பேடி கூறினார்.
  ஆளுநருடன் டெங்கு விழிப்புணர்வு நடைபயணம் சென்ற போது, துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையான கையுறைகள், காலணிகள் இல்லாமல் குப்பைகளை அகற்றுவதைப் பார்த்தேன். இதுதொடர்பாக புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  துப்புரவுத் தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு மூன்று முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. உடல் ஆரோக்கியம், குடியிருப்புகள், அவர்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி போன்றவைதான் அந்தத் திட்டங்கள். நாடு முழுவதும் 3 கோடி துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு 2020-க்குள் வீடுகள் கட்டித் தர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  துப்புரவுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் கர்நாடகம், ஹரியாணா மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால் தமிழகம், ஆந்திரம், புதுவை ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பின்தங்கியுள்ளன.
  புதுச்சேரியில் துப்புரவுப் பணியில் 1,400 தனியார் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலனைப் பாதுகாப்பது உள்ளாட்சி அமைப்புகளின் வேலையாகும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18,000 அவர்களுக்கு வழங்க வேண்டும்.
  மத்திய அரசின் திட்டங்களை புதுவை அரசு அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்தவில்லை என்றால் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
  துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களுக்கான சலுகைகள், திட்டங்களுக்கு ஆதிதிராவிடர் நலத் துறை, ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் (பாட்கோ) ஆகியவற்றை அணுகலாம் என்றார் ஜெகதீஷ் ஹர்மானி.
  பின்னர், துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை (அக். 8) காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அவர் நடத்த உள்ளார்.
  நகராட்சி ஆணையர்கள் அ.கணேசன், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai