சுடச்சுட

  

  மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரை மிரட்டுகிறார்: ஆளுநருக்கு அதிமுக கண்டனம்

  By DIN  |   Published on : 08th October 2017 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரை மிரட்டும் வகையில் ஆளுநர் கிரண் பேடி செயல்படுகிறார் என புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: டெங்குவை தடுக்க அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  அரசுப் பொது மருத்துவமனையில் எம்.எல்.ஏ.க்கள் குழு மூலம் ஆய்வு செய்தோம். அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.
  10 படுக்கைகள் இருக்கிற ஒரு வார்டில் 52 நோயாளிகளும், 24 படுக்கைகள் இருக்கிற வார்டில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் உள்ளனர். இவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிப்பதைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும்தான் இந்த அவல நிலைக்குக் காரணம்.
  குறை சொல்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆளுநர் கிரண் பேடி செயல்படுகிறார். ஆனால், நோயளிகளைப் பற்றி அவருக்குத் துளியும் கவலை இல்லை. அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் டெங்குவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் நாள்தோறும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தோடு தங்களது பணியைத் தொடரக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
  ஆளுநர் - முதல்வர் அதிகாரப் போட்டியாலும், ஆளுநரின் மிரட்டல் போக்காலும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களைப் பணியில் இருந்து விடுவிக்கத் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
  புதுச்சேரியில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக குழு ஒன்றை புதுவைக்கு அனுப்ப வேண்டும்.
  அமைச்சர் கந்தசாமி மீதான புகார் தன்னிடம் இருப்பதாகவும், அது தொடர்பாக பேச மொழி பெயர்ப்பாளராக தனது மகனை அழைத்துக் கொண்டு தன்னைச் சந்திக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரை மிரட்டும் தொனியில் ஆளுநர் பேசி வருவது கண்டிக்கத் தக்கது என்றார் அன்பழகன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai