Enable Javscript for better performance
யார் சொல்லுக்குக் கட்டுப்படுவது எனத் தெரியாமல் அதிகாரிகள் திண்டாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட- Dinamani

சுடச்சுட

    

    யார் சொல்லுக்குக் கட்டுப்படுவது எனத் தெரியாமல் அதிகாரிகள் திண்டாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 08th October 2017 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் ஆளுநரின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதா? அல்லது அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதா? எனத் தெரியாமல் அதிகாரிகள் திண்டாட்டத்துக்கு ஆளாகியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டியது.
    இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.விஸ்வநாதன் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 மடங்கு உயர்ந்துவிட்டது. கடந்த 2016-இல் 490 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது ஜனவரி முதல் செப்டம்பர் வரை மட்டுமே 1,800 பேருக்கு மேல் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அரசின் மெத்தனம்தான்.
    தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வடிகால்களைத் தூர்வார அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் டெங்கு பாதிப்பு அதிகமாகியுள்ளது.
    விரைவில் வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்க உள்ளது. இந்த முறை அதிக அளவில் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை நிலையம் கூறியுள்ளது. எனவே, இதை எதிர்கொள்ளும் வகையில் அரசு தயாராக வேண்டும்.
    பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிலையம் வில்லியனூர், ஐயன்குட்டிபாளையம், டிவி நகர், முத்தியால்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகள் டெங்கு பாதிப்பு ஏற்படும் இடங்கள் எனக் கூறியிருந்தது. அங்கெல்லாம் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம். டெங்கு விவகாரத்தில் ஆளுநரும், மாநில அமைச்சர்களும் லாவணி பாடி வருகின்றனர். போலியோயை ஒழிப்பதற்காக இயக்கம் ஒன்றைத் தொடங்கியது போல, 4 பிராந்தியங்களிலும் டெங்கு ஒழிப்பு இயக்கம் தொடங்க வேண்டும்.
    மாநில அமைச்சரே போராட்டம் நடத்துவேன் எனக் கூறியுள்ளார். இது அவர்களின் நிர்வாகத் திறமை குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆளுநர் விவகாரத்தில் கட்சி மேலிடம் என்ன கூறியுள்ளது என்பதை முதல்வர் வெளிப்படையாகக் கூற வேண்டும்.
    ஆளுநர் பேச்சைக் கேட்பதா, இல்லை அமைச்சர்களின் பேச்சைக் கேட்பதா எனத் தெரியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். இதனால், புதுவையின் வளர்ச்சி பின்னோக்கிச் செல்கிறது. புதுவையில் பாஜகவை கால் ஊன்றச் செய்ய ஆளுநர் முயற்சிக்கிறார். அவரது நோக்கம் நிறைவேறாது. இடதுசாரிகள், ஜனநாயக இயக்கங்கள் அதைத் தடுத்தும் நிறுத்தும்.
    எதற்கெடுததாலும் சிபிஐ, சிவிசி எனக் கூறும் ஆளுநர் கிரண் பேடி, புதுவையில் ஊழலை விசாரிக்கக் கூடிய அமைப்பான லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லியில் கிரண் பேடி இதற்காகப் போராட்டம் நடத்தினார் என்பதை நினைவு கூற வேண்டும் என்றார் விஸ்வநாதன். தேசியக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், துணைப் பொதுச் செயலர் அமு.சலீம் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai