சுடச்சுட

  

  வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை

  By DIN  |   Published on : 08th October 2017 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதலியார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  முதலியார்பேட்டை வைத்திலிங்கம் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (32). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர், பிரான்ஸில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாமுண்டீஸ்வரி தாய் மாலாவுடன் வசித்து வருகிறார். முருகன் விடுமுறை கிடைக்கும்போது புதுச்சேரிக்கு வந்து செல்வாராம்.
  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக். 6) சாமுண்டீஸ்வரி குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பிவிட்டு, தனது தாய் மாலாவுடன் வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வைத்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
  அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த 4 இளைஞர்கள் வீட்டுக்கு நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி இருவரும் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ரூ. 1. 24 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினராம்.
  இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
  அதில் கொள்ளையர்களின் அடையாளத்தை போலீஸார் கண்டறிந்தனர். தொடர்ந்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai