சுடச்சுட

  

  ஊசுட்டேரி கரையைப் பலப்படுத்த 8 கி.மீ. தொலைவுக்கு பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

  By DIN  |   Published on : 09th October 2017 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுட்டேரி கரையைப் பலப்படுத்தும் வகையில், 8 கி.மீ. தொலைவுக்கு பனை விதைகள் நடும் பணியை ஞாயிற்றுக்கிழமை தன்னார்வத் தொண்டு அமைப்பினர் தொடங்கினர்.
  புதுச்சேரியில் யாவரும் கேளிர் அறக்கட்டளை, உயிர்துளி, கீப் புதுச்சேரி கிளீன், மிஷன் பாரஸ்ட், சுற்றுச்சூழல் கல்வி இயக்கம் உள்ளிட்ட 10 தன்னார்வ அமைப்புகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பினரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
  இவர்கள் ஏரிகள், குளங்கள்,  நீர்வரத்து வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளின் கரைகளைப் பலப்படுத்தும் நோக்கிலும், மழைநீர், நிலத்தடி நீரை காக்கும் பொருட்டும் கரைகளிலும், சாலையோரங்களிலும் நிழல் மற்றும் பயன் தரும் மரக்கன்றுகள், பனை விதைகளை நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

  இதன் தொடர்ச்சியாக ஊசுட்டேரி வரத்து வாய்க்கால் கரையை பலப்படுத்தும் நோக்கில் பிள்ளையார்குப்பத்தில் இருந்து காட்டேரிக்குப்பம் வரை 8 கி.மீ. தொலைவுக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை நட முடிவு செய்துள்ளனர்.
  இந்தப் பணியை அவர்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ள உள்ளனர்.
  பிள்ளையார்குப்பம் பகுதியில் ஊசுட்டேரி வரத்து வாய்க்கால் கரையில் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர்கள் பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கினர். அப்போது அரசம், பாதாம், மரகதம் போன்ற மரக்கன்றுகளும் நடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மட்டும்  ஒரே நாளில் 3 ஆயிரம் பனை விதைகளை அவர்கள் நட்டனர்.
  மேலும் மரம் வளர்ப்பு, பனை விதை விதைப்பு குறித்து கட்செவி அஞ்சல்,  முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.  
  பனை மரங்கள் கடுமையான வறட்சி காலங்களில் கூட நிலத்தடி நீரை எதிர்பார்க்காமல் உயிர்வாழும் தன்மை கொண்டது. தற்போது பல இடங்களில் இருந்த பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
  எனவே, பொதுமக்களுக்கு பனை மரங்கள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பணியை மேற்கொள்வதாக அவர்கள் கூறினர்.
  ஏற்கெனவே, வேல்ராம்பட்டு ஏரிக் கரையைச் சுற்றி ஆயிரம் பனை விதைகளும், பாகூர் ஏரிக் கரையைச் சுற்றி 1,200 பனைவிதைகளும் நடப்பட்டுள்ளன. தற்போது விதைப்போம் வாருங்கள் என்ற கருத்தை மையமாக வைத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை நட திட்டமிட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai