சுடச்சுட

  

  டெங்கு நோயாளிகளுக்கு உதவுவதற்காக ஆளுநர் தலைமையில் ரத்ததான முகாம்

  By DIN  |   Published on : 10th October 2017 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஆளுநர் கிரண்பேடி தலைமையில் ராஜ் நிவாஸில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக அதிகளவில் ரத்தம் தேவைப்படுகிறது. இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  இதனிடையே டெங்கு பாதித்தவர்களுக்கு ரத்தம் கொடுக்க அதிகளவில் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
  இந்த நிலையில் ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகையில் ரத்ததான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும்  ஆளுநர் மாளிகை ஊழியர்கள் என மொத்தம் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
  பின்னர் ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் தற்போதைய சுகாதார நிலை மிகவும் சவாலானதாக உள்ளது. டெங்கு பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. எனது செயலாளரின் 2 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 12 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.
  இதுதொடர்பாக ஜிப்மர், அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது தான் டெங்கு பாதிப்பின் தீவிரம் தெரிந்தது. டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு ரத்தம் கணிசமாக தேவைப்படுகிறது.
  இதனால் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களை ரத்ததானம் செய்ய ஊக்குவிக்க ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. டெங்குப் பாதிப்பை தடுக்க புதுவை அரசு, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. நகராட்சி மூலம் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆளுநர் மாளிகை டெங்கு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. ஒரு யூனிட் ரத்தம் தானம் செய்தால் அதன் மூலம் 5 பேர் உயிரை காப்பாற்ற முடியும். புதுவையைச் சேர்ந்த ஆரோக்கியமான பொதுமக்கள் முன்வந்து ரத்ததானம் செய்ய வேண்டும்.
  ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர்கள் வரலாம்: அமைச்சர் கந்தசாமி எப்போதும் வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகைக்கு வந்து, எந்த விவகாரம் தொடர்பாகவும் என்னுடன் ஆலோசிக்கலாம். ஆளுநர் மாளிகை செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக உள்ளது. புதுவையின் மக்களுக்காக தான் சேவை புரிய வந்துள்ளேன். அதே போல ஆளுநர் மாளிகையின் கதவுகள் திறந்தே உள்ளன. புதுவையின் வளர்ச்சிக்காக அமைச்சர்கள் எந்நேரமும் வந்து சந்திக்கலாம் என்றார் கிரண் பேடி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai