Enable Javscript for better performance
புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்: முதல்வர் நாராயணசாமி- Dinamani

சுடச்சுட

  

  புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்: முதல்வர் நாராயணசாமி

  By DIN  |   Published on : 10th October 2017 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.
  புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் (பிஎஸ்சிடிஎல்) சார்பில், பொலிவுறு நகர திட்டத்தைத் நிறைவேற்றுவது குறித்த சிறப்பு கருத்தரங்கம்  நூறடி சாலையில் உள்ள
  தனியார் ஹோட்டலில் திங்கள்கிழமை  நடைபெற்றது. தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா வரவேற்றார்.
  முதல்வர் நாராயணசாமி கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
  இந்திய-பிரெஞ்சு வரலாற்றில் தனித்தன்மை பெற்று விளங்கும் புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக சிறப்புப் பணி நிறுவனம்
  தலைமைச் செயலாளர் தலைமையில், உள்ளாட்சித் துறை செயலாளரை உறுப்பினர்-செயலராக கொண்டு தொடங்கப்பட்டது.
  இந்த பொலிவுறுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 63 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, அதிநவீன பேருந்து நிலையம், மருத்துவமனைகள் நவீன மயம், சாலைகள் சீரமைப்பு, 24 மணி நேர குடிநீர், மின்சாரம், பல்நோக்கு வாகன நிறுத்துமிடம், சாலைகளில் தனி சைக்கிள் பாதை, பெரிய கால்வாய் சீரமைப்பு, அதில் படகுசேவை, கடற்கரையை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதை 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்.
  இந்தத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.500 கோடியும், பிரெஞ்சு ஏஎப்டி நிதியம் ரூ.350 கோடி, வெளிமார்க்கெட் மூலம் மீதித் தொகை என ரூ.1,827 கோடி செலவிடப்படும். இதைத் தவிர்த்து புதுவையில் 24 மணி நேர பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கும் பொருட்டும், கழிவுநீர் வடிகால் வசதியை மேம்படுத்தவும் ஏஎப்டி மூலம் ரூ.454 கோடி நிதியுதவி பெறப்படுகிறது. புதுவை அரசு தனது பங்காக ரூ.79 கோடி வழங்குகிறது. வருகிற டிசம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இந்தியா வருகிறார். அப்போது அவரை புதுச்சேரிக்கும் அழைத்து வர தூதர் ஜிக்லர் உதவ வேண்டும் என்றார் நாராயணசாமி.
  பிரான்ஸ் தொழில்நுட்ப உதவி வழங்கும்: இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் அலெக்ஸாண்டர் ஸிக்லர், புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்துக்கு பிரான்ஸ் நாட்டின் அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
  பொலிவுறு நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் அரசு குடிநீர் திட்டத்துக்காக வழங்கப்படும் கடனுதவி ரூ. 454
  கோடிக்கு  ஒப்பந்தம் செய்யவுள்ளது.இதற்காக அந்நாட்டு வங்கியுடன் முதல்வர் நாராயணசாமி மற்றும் இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் அலெக்ஸாண்டர் ஸிக்லர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  புதுச்சேரி ஸ்மாட் சிட்டி டெவலப்மென்ட் லிட் நிறுவன இணையதளம் தொடங்கப்பட்டது. மேலும் ஏஎப்டி குடிநீர் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதாவும், பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரி ஜீன் மார்க்கும் கையெழுத்திட்டனர்.
  பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கடற்கரை புனரமைப்பு திட்டம் தொடர்பாக தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனம், பிஎஸ்டிசிஎல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  நாள் முழுவதும் நடந்த கருத்தரங்கின் ஒரு பகுதியாக, திட்டமிடல்-நகர்ப்புற வடிவமைப்பு, பல்நோக்கு போக்குவரத்து, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுலா, வீட்டுவசதி, மின்சாரம், மின்னணு ஆட்சி முறை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
  உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினர்.
  அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணராவ், எம்.எல்.ஏக்கள் ஜெயமூர்த்தி, சிவா, லட்சுமி நாராயணன், புதுவைக்கான பிரெஞ்சு தூதர் கேத்ரீன் ஸ்வாட், அரசு செயலாளர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
  மேலும் பிரான்ஸ் நாட்டு ஸ்மார்ட் சிட்டி கிளப் நிர்வாகிகள், பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
  உள்ளாட்சித் துறை செயலாளர் பி.ஜவஹர் நன்றி கூறினார்.
  அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு: இந்தக் கருத்தரங்கில் தங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை எனவும், மேடையில் இருக்கை ஒதுக்கவில்லை எனக்கூறியும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.  முதல்வர் நாராயணசாமி சமாதானம் செய்தும், கருத்தரங்கிலிருந்து அவர்கள்
  வெளியேறினர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai