சுடச்சுட

  

  காலிமனை உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 11th October 2017 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளில் காலிமனைகளில் குப்பைகள், நீர் தேங்குவதைத் தடுக்க உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்காவிடில் இபிகோ 188-ஆம் பிரிவின் கீழ் கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் எச்சரித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பரவும் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவி வருகிறது. அரசு இந்த பாதிப்பை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
  அதே வேளையில், தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்கவும், நீர் தேங்குவதை தடுக்கவும் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிப் பகுதிகளில் ஏராளமான காலி மனைகள் உள்ளன. இவற்றை பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர். காலி மனைகள் பெரும்பாலும் அக்கம்பக்கத்தினர் குப்பை கொட்ட பயன்படுத்தும் இடங்களாகவே உள்ளன. மேலும், அவை கொசுக்கள் வளருமிடமாகவும், விஷஜந்துக்கள் நடமாடும் இடங்களாகவும் உள்ளன. கொடிய நோய்களை பரப்பும் பகுதிகளாகவும் அவை உள்ளன.  எனவே, காலி மனைகளின் உரிமையாளர்கள் உடனே தங்களில் இடங்களில் தேங்கியுள்ள குப்பைகள், புதர், கழிவுகள், நீர் போன்றவற்றை உடனே அகற்ற 144 பிரிவின் கீழ் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பித்த 12 நாள்களுக்குள் இப்பணியை முடிக்க வேண்டும்.
  இல்லையென்றால் பொதுமக்கள் உயிருக்கும், சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதாக இபிகோ 188-ஆம் பிரிவின் கீழ் கிரிமினல் வழக்கு பதியப்பட்டு 6 மாதங்கள் சிறையோ அல்லது ரூ.1000 அபராதமோ விதிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார் வல்லவன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai