டெங்கு: குடியிருப்புப் பகுதிகளில் ஆளுநர் ஆய்வு: வீட்டு முன் குப்பையை கொட்டிவைத்தவருக்கு அபராதம்
By DIN | Published on : 11th October 2017 09:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவை முதலியார்பேட்டை பகுதியில் டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஆளுநர் கிரண்பேடி செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வீட்டின் வாசலில் குப்பையை கொட்டி வைத்திருந்த வீட்டு உரிமையாளருக்கு ஆளுநர் அபராதம் விதித்தார்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரம் பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று சில
தினங்களாகவே ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், முதலியார்பேட்டை பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர், மக்கள் விழிப்புடன் செயல்படுமாறு வலியுறுத்தினார்.
அப்போது பழனி என்பவர் தனது வீட்டின் முன் சுகாதாரமற்ற முறையில் குப்பைகளை கொட்டி வைத்திருந்ததால், அவருக்கு ரூ.100 அபராதம் விதித்ததுடன் குப்பைகளை அகற்றும் படி கிரண் பேடி உத்தரவிட்டார்.
வீட்டின் முன் குப்பைகளை தேக்கி வைத்தாலோ, காலி மனைகளில் மழை நீர் தேங்கும் நிலையில் இருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நகராட்சி சார்பில் ரூ.100 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என ஏற்கெனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.