சுடச்சுட

  

  தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவன ஊழியர்கள் கதவடைப்புப் போராட்டம்: பொறியியல் மாணவர்கள் அவதி

  By DIN  |   Published on : 11th October 2017 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, புதுவையில் தன்னாட்சி உயர் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பொறியியல் கல்லூரியின் நுழைவு வாயில் கதவுகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாணவர்கள் வகுப்புக்குச் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றனர்.
  புதுச்சேரி பொறியியல் கல்லூரி, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி பல் மருத்துவக்  கல்லூரி, ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவம் மற்றும் விலங்குகள் அறிவியல் நிலையம், புதுச்சேரி மேல்நிலை  தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காரைக்கால் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்  கல்லூரி ஆகிய தன்னாட்சி நிறுவனங்களில்  800-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
  இதில் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை தன்னாட்சி உயர் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் அமல்படுத்தக் கோரியும், நிலுவையில் உள்ள 6-வது ஊதியக்குழு பணப்பயன்களை வழங்க வலியுறுத்தியும் பல்வேறுப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
  மேலும்,  புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்திய பிறகும், இதுவரை இவர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, அரசு தன்னாட்சி உயர் கல்வி நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
   இந்த நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடினர். அங்கு கல்லூரியின் நுழைவு வாயில் கதவுகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கை குழு அமைப்பாளர் பரசுராமன் தலைமை தாங்கினார்.
  இதனால், கல்லூரிக்குச் சென்ற மாணவ, மாணவியர் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். அங்கு வந்த காலாப்பட்டு போலீஸார் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் ஏற்படவில்லை. இதனால் போலீஸார் மாணவர்களைத் திருப்பி அனுப்பினர்.
   அரசு உடனடியாக தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்டமாக அனைத்து ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai