Enable Javscript for better performance
ஏஐடியுசி பாசிக் ஊழியர்கள் போராட்டம்: 100 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, புதுச்சேரியில் ஏஐடியுசி பாசிக் ஊழியர்கள் முன்னேற்றச் சங்கம், கூட்டுப் போராட்டக் குழு சார்பில், வெள்ளிக்கிழமை பிச்சை எடுத்து அரசு கஜானாவை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுவை அரசின் கூட்டுறவு சார்பு நிறுவனமான பாசிக் சார்பில் காய்கறி, உரம், மலர்ச் செடிகள், உணவகம், மதுபான விற்பனை என பல்வேறு கடைகள் செயல்படுகின்றன. பாசிக் நிறுவனத்தில் மாநிலம் முழுவதும் 350 நிரந்தர தொழிலாளர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    இதற்கிடையே, இவர்கள் தங்களுக்கு 40 மாதங்களாக வழங்கப்படாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களாக
    15 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரம்தரம் செய்ய வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பல நாள்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பாசிக் ஊழியர்கள் அனைவரும் பிச்சை எடுத்து அரசு கஜானாவை நிரப்பும் போராட்டம் நடத்த திட்டமிட்டு வெள்ளிக்கிழமை அந்தப் போராட்டத்தை நடத்தினர்.
    புதிய பேருந்து நிலையம், வெங்கட்டசுப்பா ரெட்டியார் சிலை, ராஜா திரையரங்கம் சிக்னல், ராஜீவ் காந்தி சிக்னல், இந்திரா காந்தி சிக்னல் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
    போராட்டத்துக்கு ஊழியர்கள் சங்கத்தின் செயலர் முத்துராமன் தலைமை வகித்தார். தலைவர் அப்துல்லா கான், துணைத் தலைவர் ரமேஷ், துணைச் செயலர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஏஐடியுசி தலைவர் அபிஷேகம், செயலர் சேதுசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொருளாளர் தரணிராஜன் நன்றி கூறினார். போராட்டத்தில், ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai