Enable Javscript for better performance
குடியரசுத் தலைவர் அறிவுரையின்படி ஆளுநர் கிரண் பேடி செயல்பட வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசுத் தலைவர் அறிவுரையின்படி ஆளுநர் கிரண் பேடி செயல்பட வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 14th October 2017 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசுத் தலைவர் அறிவுரையின்படி புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செயல்பட வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
    இதுகுறித்து அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:  புதுதில்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் உரையாற்றும் போது, ஆளுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கிப் பேசினார்.
    கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஆதாரமாக ஆளுநர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மத்திய, மாநில அரசுகள் இடையே இணைப்புப் பாலமாக ஆளுநர்கள் விளங்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்து, தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுடன் இணைந்து மாநில வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், புதுவை மாநில ஆளுநர் இதற்கு மாறாக செயல்பட்டு வந்துள்ளார். இனி மேல் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.புதுவை மாநில அரசுடன் அவர் கொண்டுள்ள மோதல் போக்கைக் கைவிட வேண்டும்.
    ஆளுநர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய வேண்டும. புதுவை அரசு டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டது. தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியதால் ஆய்வு செய்ய மத்திய குழு வந்துள்ளது. ஆனால், புதுவை அரசு அவ்வாறு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
    மாநில அரசு மக்களின் தேவைக்காக மத்திய அரசின் உதவியைப் பெற வேண்டும். அரசின் உதவித் தொகையைப் பெற்று ஆண்டுக்கு 300 பேர் மருத்துவம் படிக்கின்றனர். ஆனால், ஒருவர் கூட டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வரவில்லை. எனவே, மருத்துவம் படித்து முடித்தோர் ஓராண்டு அரசு மருத்துவமனையில் பணி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களில் 9 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு 3 ஆண்டுகளாக ஊதியம் தரப்படவில்லை.
    கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தனியார் மயமாக்கக் கூடாது. விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. செல்வம் தாக்கப்பட்டதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து வகையிலும்  அரசு தோல்வி அடைந்துவிட்டது. குடிநீர், வடிகால் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் ஏஎப்டி அமைப்புடன் புதுவை அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்யும் என்றார் அன்பழகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai