சுடச்சுட

  

  புதுச்சேரி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: போலீஸார் தடியடி: எம்எல்ஏ உள்பட 100 பேர் கைது

  By DIN  |   Published on : 14th October 2017 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையைப் பாதுகாக்க வலியுறுத்தி, லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள சர்க்கரை ஆலை வளாகம் அருகே விவசாயிகள் வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதில் என்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வத்தின் சட்டை கிழிக்கப்பட்டது. தடியடிச் சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர். எம்எல்ஏ உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
  அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம், அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஆகியவை சார்பில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் டிபிஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
  கடந்த 2016-17 இல் கரும்பு அரைவை பருவத்துக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு 7 மாதங்கள் ஆகியும் முன்பணத் தொகை ரூ. 7.5 கோடியை நிர்வாகம் தரவில்லை. அதை உடனே தர வேண்டும். நிகழாண்டு விவசாயிகளிடம் இருந்து பிடித்தம் செய்த கரும்புக் கடன் தொகை ரூ. 3 கோடியை இதுவரை வங்கிக்குச் செலுத்தவில்லை. அந்தத் தொகையை  அரசு உடனே வங்கிகளில் செலுத்த வேண்டும்.
  2015-16 ஆம் ஆண்டுக்கு பிடித்தம் செய்த கரும்புக் கடன் தொகை ரூ. 3.5 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்து அறிவித்தும், விவசாயிகளுக்கு அந்தத் தொகை திருப்பித் தரப்படவில்லை. மேலும், 3 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்குத் தர வேண்டிய ரூ. 7 கோடி நிலுவையை வழங்க வேண்டும். கூட்டுறவு ஆலையில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரை 7 மாதங்கள் இபிஎப், எல்ஐசி பணிக் கொடை  ரூ. 27.5 கோடி செலுத்தப்படவில்லை. பணியாளர்கள் வாழ்க்கை நிலை கருதி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
  ஆலைப் பணியாளர்களுக்கு போனஸ்,  ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
  ஆலை அரைவையை உடனே தொடங்க பருவ காலப் பணியாளர்களை வரவழைத்து செப்பனிடும் பணிகளைத் தொடங்க வேண்டும்.
  ஆலையைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்படப் பலர் பங்கேற்றனர்.
  அப்போது திடீரென விவசாயிகள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆலையின் உள்ளே நுழைந்தனர்.
  அவர்களைத் தடுத்த போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி மறுத்தனர்.
  ஏற்கெனவே அனுமதி தரப்பட்டுள்ளது என விவசாயிகள் கூறியபோது, அது ரத்து செய்யப்பட்டு விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அதையும் மீறி விவசாயிகள் உள்ளே செல்ல முயன்றனர். இதனால், போலீஸார் அவர்கள் மீது  தடியடி நடத்தினர். இதில், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.  டிபிஆர். செல்வத்தின் சட்டை கிழிக்கப்பட்டது. ஆலையின் முன்னாள் தலைவர் ஞானசேகரன் உள்பட 15 பேர் காயமடைந்தனர். பின்னர், எம்.எல்.ஏ. செல்வம் உள்ளிட்ட 100 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai