Enable Javscript for better performance
எஸ்.பி. பணியிடங்களை நிரப்பாததால் பதவி உயர்வு வழங்குவதில் சிக்கல்பா.சுஜித்குமார்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.பி. பணியிடங்களை நிரப்பாததால் பதவி உயர்வு வழங்குவதில் சிக்கல்பா.சுஜித்குமார்

    By DIN  |   Published on : 15th October 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள எஸ்.பி. பணியிடங்களை நிரப்பாததால் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    தற்போது புதுவை காவல் துறை டி.ஜி.பி. தலைமையில் ஐ.ஜி., டி.ஐ.ஜி., முதுநிலை எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள் கீழ் இயங்கி வருகிறது. புதுவை காவல் துறையில் தற்போது வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு காவல் சரகங்களில் 26 காவல் நிலையங்களும், 4 போக்குவரத்துக் காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், வன்கொடுமை தடுப்புப் பிரிவு, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு, சிஐடி (4 பிரிவுகள்), லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்புத் துறை, காரைக்கால் பிராந்தியத்தில் 8 காவல் நிலையங்கள், போக்குவரத்துக் காவல், வன்கொடுமை தடுப்பு, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுகளும் உள்ளன.
    இதேபோல, மாஹே, ஏனாம் பிராந்தியத்திலும் எஸ்.பி. தலைமையில் காவல் துறை பிரிவு உள்ளது.
    சட்டம், ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிக்கவும், காவல் துறையை நவீனமயமாக்கவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    தேவையான ஆண், பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். குற்றங்களை முன்கூட்டியே தடுக்க ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    இருப்பினும் பதவி உயர்வுகள், சலுகைகள் உரிய காலத்தில் கிடைப்பதில்லை என்ற குறைபாடு காவல் துறையில் நிலவி வருகிறது. புதுவையில் எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
    8 எஸ்.பி.க்கள் பணியிடம் காலி: எஸ்.பி.க்களாக பணியாற்றிய குமார், குணசேகரன், தமிழரசி, ராமச்சந்திரன், மஞ்சம் பிரசாத் ராவ் ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். பிரவீன் திரிபாதி மாற்றலாகி வெளி மாநிலத்துக்குச் சென்றுவிட்ட நிலையில், ரவீந்திரன், ஆறுமுகம் உள்ளிட்ட எஸ்.பி.க்கள் விரைவில் ஓய்வு பெற உள்ளனர். இதனால், 8 எஸ்.பி. இடங்கள் காலியாகும் நிலை உள்ளது. ஏற்கெனவே பணி ஓய்வு பெற்றவர்களுக்கான இடங்களும் இதுவரை நிரப்பப்படவில்லை. எஸ்.பி. பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டால் மட்டுமே அடுத்தடுத்து காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வை வழங்க முடியும்.
    இதற்கிடையே, எஸ்.பி.க்கள் பணியிடத்துக்கான பதவி உயர்வுப் பட்டியலில் 18 காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
    ஜிந்தா கோதண்டராமன், முருகவேல், செல்வம், மாறன், நல்லாம் கிருஷ்ணராய பாபு, பாஸ்கரன், ரங்கநாதன், வீரவல்லவன், மோகன்குமார், ராஜாசங்கர் வெல்லாட், சுப்பிரமணியன், பாலச்சந்திரன், ரகுநாயகம், சரவணன், பக்தவத்சலம், ராஜசேகரன், பழனிவேலு, சிவக்குமார் ஆகியோரின் செயல் திறன் அறிக்கை, நேர்மையான செயல்பாடு, பணியின் போது தண்டனை இல்லாதது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
    எனினும், காலியாக உள்ள சிஐடி, லஞ்ச ஒழிப்புத் துறை, காவலர் பயிற்சிப் பள்ளி, பிஓபி, ஆயுதப் படை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட எஸ்.பி. பணியிடங்களையும், மேலும் காலியாக உள்ள பணியிடங்களையும் விரைந்து நிரப்ப டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai