சுடச்சுட

  

  காங்கிரஸ் அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து பாதயாத்திரை : பாஜக செயற்குழு முடிவு

  By DIN  |   Published on : 15th October 2017 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மாநில காங்கிரஸ் அரசின் ஊழல், நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து, வருகிற நவம்பரில் பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் என்று மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  புதுச்சேரி தனியார் ஹோட்டலில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் மூர்த்தி வரவேற்றார். பொதுச் செயலர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
  கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது: தற்போது பிரதமர் மோடி, பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் தீவிர முயற்சியால் 18 மாநிலங்களில் பாஜகவின் நல்லாட்சி உருவாகி உள்ளது.
  வருகிற 2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் பாஜகவின் ஆட்சி அமையும். காங்கிரஸ் கட்சியில் வாரிசுகள்தான் கட்சித் தலைவராக முடியும். ஆனால், பாஜகவில் வாக்குச் சாவடி நிலை நிர்வாகி கூட மத்திய தலைவராக முடியும்.
  காங்கிரஸ் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது.
  புதுவை சென்டாக் முறைகேட்டால் மருத்துவ மாணவர்கள் நலன் பாதிக்கப்பட்டுள்ளது.
  புதுச்சேரி பொலிவுறு நகரம் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி, ஜிப்மர் கிளையை காரைக்காலில் தொடங்க ரூ. 1,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய பாஜக அரசு புதுவையின் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.
  தற்போது புதுவையில் பாஜக வளர்ச்சி கண்டுள்ளது. இதுவரை 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக பேசுவதைவிட்டு, காங்கிரஸ் அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் சாமிநாதன்.
  தேசிய அமைப்பு இணைப் பொதுச் செயலர் சந்தோஷ் ஜி சிறப்புரை ஆற்றினார். எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, சங்கர் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
  கூட்டத்தில், நாடு முழுவதும் பயணித்து கட்சியைப் பலப்படுத்திய தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும், மக்கள் நலனுக்காக மத்திய அரசின் மூலம் நூற்றுக்கணக்கான திட்டங்களை நிறைவேற்றி வரும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும். புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
  புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், மாநில அரசும், சுகாதாரத் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இந்த பிரச்னையில் தீவிர நடவடிக்கை எடுக்காத துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ், சுகாதாரத் துறையை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழலுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் மல்லாடி பதவி விலக வேண்டும்.
  முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியைத் தழுவி உள்ளது. தோல்வியை மறைப்பதற்காக ஆளுநர் மீது அவதூறு பரப்பி தப்ப நினைக்கும், மாநில அரசையும், முதல்வர் நாராயணசாமியையும் கண்டிக்க வேண்டும். அரசின் ஊழல், நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து வருகிற நவம்பரில் பாஜக சார்பில் பாத யாத்திரை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai