Enable Javscript for better performance
சொர்ணாவூர் அணைக்கட்டை வந்தடைந்தது தென்பெண்ணை நீர்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தென்பெண்ணை ஆற்று நீர் வெள்ளிக்கிழமை அதிகாலை புதுச்சேரி சொர்ணாவூர் அணைக்கட்டை வந்ததடைந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கடந்த 2 ஆண்டுகளாகப் புதுவையில் பருவ மழை பொய்த்துப் போனதால் ஆறு, ஏரி, ஓடை, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்கள் வறண்டுவிட்டன. இதனால் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
    இதற்கிடையே, வறட்சி நிலையைப் பார்வையிட மத்திய குழுவும் வந்தது. எனினும், விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எதுவும் இதுவரை தரப்படவில்லை.
    இந்த நிலையில், கர்நாடக மாநிலம், நந்திதுர்க் பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி அணை நிரம்பியது. இதைத் தொடர்ந்து, சாத்தனூர் அணையும் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டது.
    அணையில் இருந்து விநாடிக்கு 8,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் விழுப்புரம் மாவட்டம், எல்லி சத்திரம் அணைக்கட்டுக்கு வருகிறது. அங்கிருந்து விநாடிக்கு 4,300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு, அந்த நீர் சொர்ணாவூர் அணைக்கட்டை வந்தடைந்தது.
    இந்த அணைக்கட்டில் உள்ள பங்காரு வாய்க்காலுக்கு 4 மதகுகள் வழியாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, பாகூர் ஏரியை வந்தடையும் என செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி தெரிவித்தார்.
    முன்னதாக, சொர்ணாவூர் அணைக்கட்டுப் பகுதியை அவர் ஆய்வு செய்தார். உதவிப் பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
    சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பாகூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai